threten to ops
சசிகலா தரப்பால் உயிருக்கு ஆபத்து….ஓபிஎஸ்க்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கக் கோரி ராஜ்நாத் சிங்கிடம் மனு…
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த கடிதத்தை ஓபிஎஸ் அணி ஆதரவு எம்.பி.க்கள் உள்துறை அமைச்சரிடம் நேரில் வழங்கினர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனி அணியாக பிரிந்து சென்றார்.
இதையடுத்து ஓபிஎஸ்க்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே மிகப் பெரிய செல்வாக்கு உயர்ந்து வருகிறது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் மைத்ரேயன், அசோக்குமார், சுந்தரம், சத்தியபாமா உள்பட 12 பேர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து ஓபிஎஸ்க்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கடிதம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், அதிமுக . தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஓபிஎஸ்க்கு பெரிய செல்வாக்கு ஏற்பட்டுள்ளது என்றும் இதனைப் பொறுக்க முடியாத சசிகலா தரப்பினர் ஓபிஎஸ்க்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
ஓபிஎஸ்ன் கையை வெட்டுவேன் என்று பகிரங்கமாக மிரட்டிய முன்னாள் எம்எல்ஏ ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது, ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டதாக மைத்ரேயன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள ஓபிஎஸ்ன் வீடு,பெரியகுளத்தில் உள்ள அவரது வீடு, போடியில் உள்ள ஓபிஎஸ்ன் எம்எல்ஏ அலுவலகம் போன்றவை தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக அவர் கூறினார்.
இப்படி மிரட்டலும், தாக்குதலும் தொடர்வதால் ஓபிஎஸ்க்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும், புலனாய்வுத்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய பாதுகாப்பு அளிக்க அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும் மைத்ரேயன் தெரிவித்தார்.
