கராத்தே தியாகராஜன் வருத்தம் தெரிவித்தால் மீண்டும் உறுப்பினராக சேர வாய்ப்பு உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ’’தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதும், மற்றொரு கட்சி தோற்பதும் சகஜம். ஆனால், பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தான் ஓட்டுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்பது தான் காங்கிரசின் விருப்பம். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ராகுல் காந்தி பதவியில் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு என்று கூறி இந்தியாவை பிளவுப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளதை ஏற்கமாட்டோம்.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. ஆனால் பற்றாக்குறை இல்லை என்று தமிழக அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது. பொய் தகவல்களை தொடர்ந்து கூறி கொண்டிருக்காமல் அதற்கு தீர்வு காண அமைச்சர்கள் முயற்சி செய்ய வேண்டும். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. இந்த கூட்டணி உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர் பார்ப்பு.

கராத்தே தியாகராஜன் கட்சி விதிமுறைகளை மீறி சில கருத்துக்களை தெரிவித்ததால் வெளியேற்றப்பட்டு உள்ளார். அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து மீண்டும் உறுப்பினராக சேர வாய்ப்பு உள்ளது. எனவே இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை’’ என அவர் தெரிவித்தார்.