Thoothukudi went to O Panneerselvam Jayakumar Kadambur Raju
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் சந்தித்து ஆறுதல் கூறினர். மருத்துவமனை சென்ற அவர்கள் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் துணை முதலமைச்சரிடம் ஆக்ரோஷமாக சில கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மாநில அரசு, ஸ்டெர்லைட் ஆலையத்திடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு இந்த துப்பாக்கிசூட்டை நடத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்ட அனைவருமே இது சம்பந்தமாக உடனடியாக சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்றும் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பார்வையிட வேண்டும் என்றனர். வீடுகளுக்குள் புகுந்து போலீசார் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பாகவும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஓபிஎஸ், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றது சம்பிரதாய சடங்காகவே உள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்த துப்பாக்கிசூடு சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்கும் சம்பவம் என்றார். பசுமை தீர்ப்பாயத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதையே அரசு செய்யும் என்றார். ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓ.பி.எஸ். கூறினார்.

பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டிற்கு யார் அனுமதி அளித்தது என்று செய்தியாளரின் கேள்விக்கு அவர் பதிலேதும் அளிக்கவில்லை. இதன் பின்னர், பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றார் அவருடன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் உடன் சென்றனர். ஆட்சியர் வளாகத்துக்கு சென்ற அவர்கள் சிறிது நேரத்தில் தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு விரைவாகவே தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்றனர்
