தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க அனுமதியை தடை செய்யவேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த 50 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் வசிக்கும் நாடுகளில் முன்னெடுத்துள்ளனர். இந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்ட விரோதமான முறையில் 324 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த முற்றுகைப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முற்றுகை போராட்டத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றன்ர்.