கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த  துரைமுருகன், “இப்போது எங்களது பழைய கஸ்டமர்களான காங்கிரஸும், முஸ்லிம் லீக்கும் மட்டும்தான் கூட்டணியில் இருக்கிறார்கள். மதிமுக,விசிக உள்ளிட்டவை இப்போது எங்கள் கூட்டணியில் இல்லை” என்று கூறியிருந்தார்.

இது பலத்த சர்ச்சையையும் அரசியல் அரங்கில் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று  சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த  திருமாவளவன், திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. கொத்தமங்களத்தில் தினகரனை சந்தித்தது எதேச்சையானது. தேர்தல் களத்தில், திமுக காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் உறவுகள் இணக்கமாக இருக்கிறது.

தோழமை கட்சிகள் என்பதால் கூட்டணி உருவாகாது என்பது இல்லை, உறுதியாக கூட்டணி அமையும். மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்னது யதார்த்தமானது என்று தெரிவித்தார்.

இவ்வாறு திமுகவுடனான கூட்டணி குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அக்கட்சி தலைவர் ஸ்டாலினை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் இன்று மதியம் 12 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். எப்போதுமே மற்ற கட்சித் தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து பேசும்போது எப்போதும், பொருளாளர் துரைமுருகன் உடன் இருப்பார். ஆனால் இன்றைய ஸ்டாலின் திருமாவளவன் சந்திப்பில் அவர் உடனில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற செய்தியை அடுத்து திருமாவளவனுடன்  ஸ்டாலின் சந்திப்பு நடத்துவது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் திமுக தரப்பில் தயாநிதி மாறன் ஆர்எஸ் பாரதி மற்றும் விசிக சார்பில் வன்னியரசு உடன் உள்ளனர்.