எதிர்வரும் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோவாகத்தான் இருக்குமென பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். திமுக ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் தனது தேர்தல் அறிக்கையையே தேர்தல் கதாநாயகன் என்று வர்ணித்து வருகிறது. ஏனெனில் மற்றக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை விட திமுகவின் தேர்தல் அறிக்கை வித்தியாசமானதாகவும், வாக்காளர்களை எளிதில் கவரக் கூடியதாகவும் இருப்பதே இதற்கு காரணம். இந்நிலையில் மற்ற எந்த கட்சிகளையும் விட தேர்தல் அறிக்கைக்கு தனிக்குழு அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கூட்டத்தையும் திமுக இன்று ஒருங்கிணைத்து வேகம் காட்டி வருகிறது. 

அதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில்தான் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திமுகவின் தேர்தல் அறிக்கையை இவ்வாறு விமர்சித்துள்ளார். 

அதாவது, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், 2021 மே மாதம் நடைபெற உள்ளது, தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதன்முதலாக செல்வி ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி  என்ற மாபெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாத தேர்தலாக இது நடைபெற உள்ளது. முற்றிலும் மாறுபட்ட தேர்தலாகவே இது நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் பிரதான கட்சிகளான அதிமுக-திமுக ஆகிய கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு வருகின்றன. அதற்காக இரு கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், நீண்ட சலசலப்புக்கு பின்னர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதேநேரத்தில் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சியில் சலசலப்பு இன்றி அதிமுக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமாக காத்திருக்கின்றனர். அதேபோல் திமுகவும் கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த அதே வெற்றி கூட்டணியை சட்டமன்றத்திலும் தொடர்வது என முடிவு செய்துள்ளது.  மேலும் கட்சியில் பல்வேறு தளங்களில் நிர்வாகிகள் மாற்றம், புதிய நிர்வாகிகள் நியமனம் என ஸ்டாலின் அதிரடி காட்டி வருகிறார். இந்நிலையில் அதன் அடுத்த கட்டமாக மற்ற எந்த கட்சிகளையும் விட " தேர்தல் அறிக்கை" தயாரிக்கும் பணியில் திமுக தீவிரம்காட்டி வருகிறது. 

அதற்காக  8 பேர் கொண்ட குழுவையும் ஸ்டாலின் அமைத்துள்ளார், அதில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, துணைச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி,  நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், மற்றும் பேராசிரியர் ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே திட்டமிட்டபடி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர் பாலு தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் இது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், அடையாறில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேளாண் சட்டத்தால் நாட்டில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர், ஆனால் எதிர்க்கட்சியினர் அதைத்  அரசியலாக்கி வருகின்றனர். சமூகத்தில் ஒற்றுமை நிலவ அரசு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும், மேலும் தலித் ஊராட்சி மன்ற தலைவர் விவகாரத்தில் திமுக தலைவர் இதுவரை தனது கட்சியை சார்ந்த  ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என கேள்வி எழுப்பிய எல். முருகன், பாஜகவில் தொடர்ந்து பல பிரபலங்கள் இணைந்து வருகின்றனர் என்றும், மேலும் பலர் இணைய உள்ளனர் என்றும் கூறினார். மேலும் திமுக தேர்தல் அறிக்கை பணி குறித்து தெரிவித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் தேர்தலில் ஜூரோவாகத்தான் இருக்கும் என்றார்.