விருதுநகர்

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரும். அப்போது சிலிப்பர் செல்கள் வெளிவந்து ஆட்சி கவிழும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர், "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் சரியான பாதையில் செல்கிறது. முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து கூறவில்லை. 

முதலமைச்சர் எதற்காக பயப்படுகிறார்?? ஜெயக்குமார் ஏன் கைது மிரட்டல் விடுகிறார்? 

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது நடந்ததாக கூறப்படும் காவிரி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றது உண்மை என தெரியவருகிறது. அவருக்கு கால் இல்லை, கை இல்லை என கூறுவது பொய் என தெரியவந்துள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்து ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாடு அனுப்பி இருக்க வேண்டும். தனிப்பட்ட நபர் அவரின் சிகிச்சை குறித்து முடிவு செய்ய முடியாது. 

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரும். அப்போது ஆட்சி கலைந்துவிடும். அப்போது சிலிப்பர் செல்கள் வெளிவந்து ஆட்சி கவிழும்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் நடந்தால்தான் அதிகாரிகள் மீதான விசாரணை நேர்மையாக நடைபெறும்" என்று அவர் கூறினார்.