வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் ஒரு போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை விடுத்தது ஏன் என இப்போது தெரிய வந்துள்ளது.

குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடியபோது வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அப்போது எங்கள் மாவட்டத்தில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் எடுக்க மாட்டோம். தண்ணீர் கொண்டு சென்றால் வேலூர் மாவட்டத்தில் போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரித்தார். 

அப்போது அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன. ஒரு கட்சியில் முக்கியத் தலைவராக இருந்து கொண்டு இப்படி சுயநலமாக பேசுறாரே என விமர்சனங்கள் எழுந்தன. அதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 300 அடி முதல் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்படும் 37 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்நாளில் 24 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நேற்று மேலும் 8 நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குழு இணைந்து சீல் வைத்தனர். இதில் காட்பாடி அருகே உள்ள கசம் கண்டிப்பேடு பகுதியில் இயங்கி வரும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துக்கு சொந்தமான அருவி என்ற குடிநீர் நிறுவனத்தில் போர்வெல் பம்ப் குழாய் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிறுவனம் கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கதிர்ஆனந்த் எம்.பி. குடும்பத்திற்கு சொந்தமான இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 17 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் இருந்து குடிநீர் போர்வெல் மூலம் உறிஞ்சி விற்பனை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் கிராமங்களுக்கு இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. ஆனால் மாவட்டத்தில் 37 குடிநீர் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 90 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் எம்.பி.யாக உள்ள கதிர் ஆனந்த் குடும்பத்துக்கு சொந்தமான குடிநீர் நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்றால் தனது மகன் நடத்தும் நிறுவனம் பாதிக்கப்படலாம் என்பதால் தான் துரைமுருகன் அப்போது கோபப்பட்டு தண்ணீர் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். அவர், வேலூர் மாவட்டத்தின் மீது இருந்த அக்கறை காரணமாக அப்போடு பேசியதாக நினைத்துக் கொண்டோம். அவரது மகனது நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்ட பிறகு தான் தனது சுயநலனுக்காக தண்ணீர் தர அப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.