வேலூர் தொகுதியை தவிர இந்தியாவில் உள்ள 542 வாக்குச்சாவடிகளிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குசாவடிக்குள் என்ன நடக்கும். எப்படி வாக்குப்பதிவு நடக்கும் என்பது பலருக்கும் மர்ம ரகசியமாக இருக்கும். எப்படி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குச்சாவடி நடைமுறைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

 

தேர்தல் வாக்கு எண்ணும் நாள் அன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வாக்கு எண்ணும் பணியாளர்கள், வேட்பாளர்களின் ஏஜெண்ட், தேர்தல் ஆணைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வேட்பாளர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் பாஸ் வழங்கும். அந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும். 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தபால் வாக்கு தான் எண்ணப்படும். தபால் வாக்குகள் தபால்கள் மூலம் வந்ததும் அது தேர்தல் நடத்தும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் சீல் வைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்குகள் எண்ணப்பட்டு தபால் ஓட்டு நிலவரங்கள் முதலில் அறிவிக்கப்படும். தபால் வாக்குகள் எல்லாம் பேப்பரில் உள்ள வாக்குகள் தான். அந்த வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து வைக்கப்படும். 

பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி நேரடியாக வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஏஜெண்ட்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் அறையை திறப்பார். அதற்கும் முன்னதாக வாக்கு எண்ணும் மையத்தில் டேபிள்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளிலும் எவ்வளவு இயந்திரங்கள் எண்ணப்படும், எந்தெந்த இயந்திரங்கள் எண்ணப்படும் ஆகியவை முடிவு செய்யப்பட்டிருக்கும். 

ஒவ்வொரு மேஜையிலும் ஒவ்வொரு வேட்பாளருக்கான ஏஜெண்ட்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட அனுமதியுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் முன்னதாகவே மேஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஸ்ட்ராங் அறை திறக்கப்பட்ட பின்பு தேர்தல் பணியாளர் பாதுகாப்பு வீரர்களின் துணையுடன் ஸ்டாரங் அறையில் உள்ள ஒவ்வொரு இயந்திரத்தையும் மேஜைக்கு கொண்டு செல்வர். அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

அதில் பதிவான வாக்குகள் குறிக்கப்பட்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிகாரிக்கு ஒவ்வொரு இயந்திரம் எண்ணப்பட்ட பின்பும் அதன் நிலவரங்கள் தெரிவிக்கப்படும். அந்த எண்ணிக்கையை ஒன்று சேர்த்து அந்த தேர்தல் அலுவலர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை முன்னணி நிலவரங்களை வெளியிடுவார். அந்த முன்னணி நிலவரங்கள் நேரடியாக அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த நிலவரங்கள் டிவி, இண்டர்நெட் உள்ளிட்ட தளங்களில் நாம் பார்க்கிறோம். 

இந்தாண்டு தேர்தலில், தேர்தல் ஆணையம் விவிபேட் எனப்படும் இயந்திரத்தில் வாக்குப்பதிவாகும்போது அது பேப்பரிலும் அச்சாகும் இயந்திரத்தை பயன்படுத்தினர். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையின் போது விவிபேட் இயந்திரத்தில் உள்ள பேப்பரில் உள்ள வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகளையும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு இயந்திரம் விதம் எண்ணப்படும் என தெரிவித்துள்ளனர்.  

ஆனால், அரசியல் கட்சியினர் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 இயந்திரங்களில் விவிபேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை சரி பார்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கு 30 விவிபேட் மற்றும் இயந்திர வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் சரி பார்க்கப்படும். இதனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட வழக்கத்தை விட சிறிது நேரம் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல ஒருசிலரை தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை. வாக்கு எண்ணிகையில் ஒருவர் வெற்றி பெற்றார் என்பதை ரிட்டர்னிங் அதிகாரி தான் அறிவிப்பார். இந்த வாக்கு எண்ணிக்கைக்கு ரிட்டர்னிங் அதிகாரி தான் பொறுப்பு என்றாலும் இதை கண்காணிக்க 2 அப்சர்பர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் நோட் செய்து கொண்டே இருப்பார்கள். 

ரிட்டர்னிங் அதிகாரி முன்னணி நிலவரங்களை தேர்தல் ஆணையத்திற்கும் தெரியப்படுத்துவார். அதன் படி மொத்தம் எத்தனை தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் முன்னணியில் இருக்கிறது என தேர்தல் ஆணையமும் அவர்களது இணையதளத்தில் லைவ்வாக வெளியிடும். நாளை ரிசல்டில் வெற்றிபெறப்போகும் கட்சியே அடுத்து இந்தியாவை 5 ஆண்டுகள் ஆளும் என்பதால் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒரு வித பதற்றத்துடன் இருக்கின்றனர்.