காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக எம்.பிக்கள் பதவி விலகி தியாகம் செய்ய வேண்டும் எனவும் இதனால் மட்டுமே மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடியும் எனவும் மக்கள் தீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

 காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும்  மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 

உச்சநீதிமன்றம் கெடு விதித்த 6 வார காலமும் முடிவடைந்த நிலையிலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வில்லை. இதனால் தமிழக அரசியல் கட்சிகளும் மக்களும் விவசாயிகளும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். 

மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக அதிமுக சார்பில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் கருப்பு கொடி போராட்டமும் அனைத்து கட்சி கூட்டமும் கூட்டப்பட உள்ளது. 

இதனிடையே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் எம்.பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தமிழக எம்.பிக்கள் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக எம்.பிக்கள் பதவி விலகி தியாகம் செய்ய வேண்டும் எனவும் இதனால் மட்டுமே மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.