திமுக சார்பில் ஏப்ரல் மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் எனவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாகவும் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும்  மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 

உச்சநீதிமன்றம் கெடு விதித்த 6 வார காலமும் முடிவடைந்த நிலையிலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வில்லை. இதனால் தமிழக அரசியல் கட்சிகளும் மக்களும் விவசாயிகளும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். 

இந்நிலையில் திமுக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. 

இதில், திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 517 பேர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, திமுக சார்பில் ஏப்ரல் மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் எனவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாகவும் தெரிவித்தார். 

காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.