தனது கட்சி ஆட்சிப் பொறுப்பேற்கும் சூழல் வந்தால் முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என்றும், கட்சியைச் சேர்ந்த வேறொருவர் அப்பொறுப்பை வகிப்பார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மாவட்ட செயலாளர்கள் யாரும் அதனை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

சென்னையில் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர் கூட்டத்தில் 36 மாவட்டங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், ரஜினியின் அரசியல் வருகை, மாவட்ட செயலாளர்களின் பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்பது உண்மையல்ல என நிர்வாகிகளிடையே அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை ஆட்சிப் பொறுப்பேற்கும் சூழல் வந்தால், தாம் முதல்வராக மாட்டேன் என்றும் கட்சித் தலைவராக மட்டுமே செயல்படப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்சியைச் சேர்ந்த மற்றொருவர் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என்றும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கட்சியே கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எனவும் ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினி கட்சி ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் அவர் இல்லாமல் வேறு ஒருவரை முதல்வராக வைப்பதற்கு சம்மதமா என்று செயலாளர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சம்மதம் இல்லை என்று கூறிவிட்டார்கள். இதுதான் ரஜினிக்கு ஏமாற்றம் என்கிறார்கள்.