திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் சிறிய திருத்தம், கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சட்டசபை தேர்தல் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல் தனது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி முதன்முதலாக அரசியல் களம் கண்டது. தற்போது 2021 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் பிரச்சாரத்திற்கு தயாராகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூரில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஒரு தனியார் நிறுவனம் சர்வே நடத்தி உள்ளது. அந்த சர்வேயில் சென்னையில் அக்கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகத் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. எனவே அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

இந்தத் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ஆர்.நட்ராஜ் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இந்தத் தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக ஐந்து முறையும் பாஜக ஒரு முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. சமுதாய வாக்குகளை குறி வைத்து கமல்ஹாசன் இந்த தொகுதியை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.