கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காந்திஜெயந்தி அன்று தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் கிராம சபைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம்.விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள வேளாண் பாதுகாப்பு சட்டங்களை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றது.எனவே இந்த கிராம சபைக்கூட்டத்தில் வேளாண் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதனை முறியடிப்பதற்காக அதிமுக அரசு கூட்டம் கூடினால் கொரோனா தொற்று ஏற்படும் என்று கூறி தமிழகத்தில் கிராம சபைக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று திடீர் உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு.
 


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று..திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளி விட்டும் கூட்டத்தில் மக்கள் பங்கேற்றனர். புதுச்சத்திரம் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக கூறி கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு மீது 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.