பெண் பாதுகாப்பு குறித்து பேசும் திமுக வெறும் பேச்சோடுத்தான் உள்ளது. மிக அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த சகோதரி பூங்கோதைக்கு அக்கட்சியில் பாதுகாப்பு இல்லை.
வரும் 14 ஆம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்கிறார் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மதுரையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதன் பின்னணியில் சில விஷமிகள் உள்ளனர், நோட்டமிட்டு பயங்கரவாதிகள் தேச விரோதிகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். இப்போதே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதனை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. அதற்கான வேட்பாளர் குறித்து தேசிய தலைமை அறிவிக்கும். முள்ளி வாய்க்கால் நினைவு சின்னம் தகர்ப்பு சம்பவம் கண்டிக்கத்தக்கது.நினைவு தூண் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும், நேற்றே எனது கண்டனத்தை தெரிவித்து விட்டேன். தமிழக விவசாயிகள் மோடியின் வேளாண் திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களும் விவசாயிகளும் திமுகவிற்கு தோல்வியை கொடுக்க தயாராக உள்ளனர். விடியலுக்கான வெளிச்சத்தை கொண்டு வருவதாக ஸ்டாலின் கூறுகிறார், 2011 க்கு முன் திமுக தமிழகத்தை எப்படி சீரழித்தது என்பதை அனைவரும் பார்த்தோம். 2011 க்கு முன் தமிழகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது, 2011 க்கு பின் தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகியது.
திமுகவினர் எப்படி நிலங்களை அபகரித்தார்கள் என்பது தெரியும். தமிழக அரசால் நில அபகரிப்புக்கு என தனி பிரிவே உருவாக்கப்பட்டது. பெண் பாதுகாப்பு குறித்து பேசும் திமுக வெறும் பேச்சோடுத்தான் உள்ளது. மிக அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த சகோதரி பூங்கோதைக்கு அக்கட்சியில் பாதுகாப்பு இல்லை. இப்படி இருக்கும் திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவிற்கு தோல்வி தோல்வி தோல்வி மட்டும் தான். தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முதல்வரின் ஆட்சி நடைபெறுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடரும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவில் இடம் இருக்கிறதா என்பதே தெரிய வில்லை.
அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா, கனிமொழியா, உதயநிதியா என்பது தெரியவில்லை. ரஜினி தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறவர், ஆன்மீகத்தை எடுத்து செல்பவர் நிச்சயம் அவரின் ஆதரவு பாஜக விற்கு கிடைக்கும். தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் நடைபெறும் தாக்குதல் கண்டிக்கதக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2021, 3:39 PM IST