ஏழை தாயி மகன் என்று சொல்லும் பிரதமர் மோடி கொண்டு வந்த சட்டத்தை விவசாயி  என கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து பச்சை துரோகம் செய்துள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் கருப்பு கோடி ஏந்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டியில் உள்ள மைதானத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்;- ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்த்த பிறகே சென்னை செல்வேன். திமுக ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் அதிகம் வரக்கூடாது என்று கைது செய்கிறார்கள் என்றார். 

மேலும், இந்த போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக, கட்சி வளர்ச்சிக்கு, சொந்த நோக்கத்திற்காக அல்ல. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்காக நடக்கும் போராட்டம் என்பதை ஆளுங்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். முதல்வரும் இதனை தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி சொல்வதை அப்படியே நிறைவேற்றும் போலீசார், இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் ஆட்சிக்கு வரப்போகிறவர்கள் தான். இதில் மாற்றம் எதுவும் கிடையாது. விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, போராடும் விவசாயிகளை அழைத்து பேசி, பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் நடக்கிறது.சுதந்திர இந்தியாவில் இதுவரை இது போன்று ஒரு போராட்டம் நடந்தது இல்லை. வரலாற்றில் இடம்பெறக்கூடிய அளவுக்கு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.இந்த போராட்டத்தில் சேலம் தொகுதி தி.மு.க. எம்.பி.எஸ்.ஆர்.பார்த்திபன், வீரபாண்டி ராஜா, கே.என்.நேரு எம்.எல்.ஏ., உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.