கொள்ளைக் கூட்டத்துக்கும் - அவர்களைக் காப்பாற்றும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’புயல் காரணமாகச் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு தொகுதிகளுக்கு, இன்று காலை சென்று பார்வையிட்டேன்; ஆய்வு செய்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லி, நிவாரணப் பொருள்கள் வழங்கினேன்

.

நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புயல் பாதிப்பு இல்லை என்றாலும் சுமார் 13 மாவட்டங்கள் இதன் பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கழகத் தோழர்கள் உதவிகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்!

திக்கெட்டும் புகழ் பரப்பிய திருநெல்வேலி சீமையில் இன்றைய தினம் ‘தமிழகம் மீட்போம்’ என்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சியாக இருந்தாலும் சோழர் ஆட்சியாக இருந்தாலும் விசயநகரப் பேரரசு ஆட்சியாக இருந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சியில் மிக முக்கியமான நகரமாக இருந்த ஊர் தான் இந்தத் திருநெல்வேலி.

இயற்கை எழிலும், அமைதிச் சூழலும் கொண்ட இந்த நெல்லை மாவட்டம் கழகத்தின் நிர்வாக வசதிக்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுப் புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நெல்லை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களும், நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளராக அப்துல் வகாப் அவர்களும், தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக சிவபத்மநாதன் அவர்களும், தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக துரை அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய பொறுப்பாளர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் துரை மட்டும் தான் பொறுப்புக்கு புதியவர். மற்ற மூவரும் ஏற்கனவே மாவட்டப் பணிகளில் அனுபவம் வாய்ந்தவர்கள். நிர்வாக வசதிக்காக, பொறுப்புகளைப் பரவலாக்க வேண்டும் என்பதற்காகப் புதிய மாவட்டங்களாக உருவாக்கினாலும், உங்கள் அனைவரது செயல்பாடும் ஒரே ஒரு நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். அது கழக வளர்ச்சி, கழகத்தின் வெற்றி. இது ஒன்றுதான் உங்களது இலக்கு. அந்த இலக்கை மாநில அளவில் அடைவதற்கு நெல்லை, தென்காசி மாவட்டப் பொறுப்பாளர்களாக நீங்கள் நான்கு பேரும் அயராது பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பணியாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

தி.மு.க.வை எதிர்ப்பதன் மூலமாகத் தமிழக மக்களின் எழுச்சியை, வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். தி.மு.க.வை வீழ்த்திவிட்டால், தமிழர்களை வீழ்த்துவது எளிது என்று நினைக்கிறார்கள். இந்தத் தமிழின விரோத அரசியல் கூட்டத்துக்கு பாடம் கற்பித்தாக வேண்டிய கடமை இந்தத் தேர்தலில் தமிழக மக்களுக்கு இருக்கிறது.

கடந்த 22-ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பது போல அவரது பேச்சு இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனை பட்டியல் போடத் தயாரா என்று அமித்ஷா கேட்கிறார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா? அல்லது பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு வேற்று கிரகத்தில் இருந்து குதித்தாரா என்று தெரியவில்லை.

ஒரு முச்சந்தியில் நின்று நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்வதற்கு தயார் என்று அமித்ஷா சொல்லி இருக்கிறார். அவர் மத்திய உள்துறை அமைச்சர். அதனால் முச்சந்திக்கு வாருங்கள் என்று அழைக்க விரும்பவில்லை. தமிழகத்துக்கு பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகள், புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆகியவை கொண்ட பட்டியலை வெளியிடுங்கள். அதன்பிறகு பேசலாம்.

அமித்ஷா என்றால் எல்லாம் தெரிந்தவர், சாணக்கியர், அவருக்கு எல்லா மாநிலங்களும் அத்துபடி என்று ஊடகங்கள் அவரை பூதாகரமாக்கி காட்டுகிறது. அவருக்கு முதலில் தி.மு.க. என்றால் என்ன மாதிரியான அரசியல் கட்சி என்பதே தெரியவில்லை. எழுபது ஆண்டு இயக்கம் இது! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த இயக்கம் இது. ஒரு முறையல்ல, ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம் இது. தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் இது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி இது.

அது எதுவும் தெரியாமல், ஏதோ மந்திரவாதியைப் போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் பார் என்று ஷோ காண்பிக்க, இது வட மாநிலம் அல்ல. இது தமிழ்நாடு என்பதை, தி.மு.க. தொண்டனாக அமித்ஷாவுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.