Asianet News TamilAsianet News Tamil

இது திமுக என்ற கட்சியின் அரசு அல்ல.. எவ்வித பேதமும் இல்லாத அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு.. ஸ்டாலின்

 தமிழ்நாட்டைப் பராமரிப்பதோடு உழவர்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் அரசாகத் திகழும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

This is not a DMK government: it is a Tamil Nadu government owned by all people... mk stalin
Author
Tamil Nadu, First Published May 9, 2021, 12:17 PM IST

தமிழ்நாட்டைப் பராமரிப்பதோடு உழவர்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் அரசாகத் திகழும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடித்தில்;- தமிழக அரசின் முதலமைச்சர் எனும் மிகப் பெரும் பொறுப்புக்கு நான், உங்கள் அளவற்ற அன்பினால், அதில் விளைந்த   ஆதரவினால், என் மீது நீங்கள் என்றும் வைத்திருக்கிற நிலையான நம்பிக்கையினால் பதவி ஏற்றிருக்கிறேன்; பதவி ஏற்றிருக்கிறேன் என்பதைவிட, பொறுப்பேற்றிருக்கிறேன் – பணியேற்றிருக்கிறேன் என்பதுதான்  பொருத்தமான உண்மை.

This is not a DMK government: it is a Tamil Nadu government owned by all people... mk stalin

ஆருயிர்க் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளின்  அயராத உழைப்பினால், கூட்டணிக் கட்சித் தோழர்களின்   ஆர்வம் மிகு துணையினால், அவற்றால் திரண்ட மகத்தான வெற்றியால், அதனை மனமுவந்து வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களால், அன்னைத் தமிழகத்திற்கு அருந்தொண்டாற்றுகின்ற முதல் வரிசைப் பணியாளனாக - முழு நேர ஊழியனாக என்னைக் கருதிக் கொள்கிறேனே தவிர, முதலமைச்சராகக் கருதவில்லை. நெஞ்சை அள்ளும் காவியமாம் சிலப்பதிகாரத்தில் ‘மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்’ என்று சேரன் செங்குட்டுவன் சொல்வதை இளங்கோ அடிகள் குறிப்பிடுவதைப் போல, ஆட்சிப் பொறுப்பு என்பது மலர் மஞ்சமல்ல, அது முள்ளாலான படுக்கை. இதை மனத்தில் வைத்து தமிழகத்தில் மீண்டும் முன்னேற்றப் பணிகளை முயல் வேகத்தில் முடுக்கி விடும் தலையாய

பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன் (நாம் ஒன்றிணைந்து தலையில் ஏற்றிருக்கிறோம்) என்பதை உங்கள் அனைவர்க்கும் உணர்த்திட விரும்புகிறேன். கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகம் முழுவதும் பல முறை சுற்றிச் சுழன்று பயணம் செய்து சகல விதமான நம் மக்களையும் நேரில் சந்தித்த காரணத்தால் எனக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்களை அடிப்படையாக வைத்து, தமிழகம் பற்றி நான் வளர்த்துக் கொண்டிருக்கும் கனவுகளை  ஒன்று விடாமல் நிறைவேற்றுகிற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதாக எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். தமிழகத்தைத் தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே நான் எடுத்திருக்கின்ற சூளுரை.

This is not a DMK government: it is a Tamil Nadu government owned by all people... mk stalin

கடின உழைப்பைச் சிந்தத் தூண்டுவதும், தமிழ்ப் பண்பாட்டை மீண்டும் துளிர்க்கச் செய்வதும், நம் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்வதும், சமூக மேம்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும், மகளிர் நலத்தை உறுதி செய்வதும், பெண்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதை முழுமையாக்குவதும், மாநிலத்தின் கட்டமைப்பைச் சீர்திருத்திச் செம்மையாக்குவதும், தனிநபர் வருமானத்தைப் பெருமளவு உயர்த்துவதும், மக்கள் நல வாழ்வைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதும், தமிழ் மொழியைப் புத்துணர்வு அடையச் செய்வதும், சுற்றுலா மேம்பாட்டை அனைத்துத் தளங்களிலும் விரிவுபடுத்துவதும், மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணிசமாக உயர்த்துவதும், ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் சமூகநீதி இலட்சியத்தைப் போற்றி உயர்த்துவதும்,  இந்திய அரசியல் சட்டத்தில் பொறிக்கப் பட்டுள்ள மாநில உரிமைகளை எந்த நிலையிலும் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் நிர்வாகம் செய்வதும் நாம் கொண்டிருக்கின்ற தனிப் பெரும்  நோக்கங்கள்.

கடந்த பத்தாண்டுகளாக ஏமாற்றங்களையே எதிர்கொண்ட மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். கடந்த காலத்தை நினைத்து வசைபாடி காலத்தைக் கழிப்பதில் எந்தப் பயனும் இல்லை. இருளைப் பழிப்பதைவிட, அதனை அகற்றும் ஓர் அகல் விளக்கை ஏற்றுவது உன்னதமான செயல். இலையுதிரைக் குறை சொல்வதைவிட, வசந்தத்தை வரவழைக்கப் பாடுபட முற்படுவது பயனுள்ள செயல். நாம் பதவியேற்றிருக்கும் தருணம், கடுமையான சூழலைக் கொண்டதாக அமைந்திருப்பது காலம் நமக்கு விடுத்திருக்கும் சவால் என்றே கருதுகிறேன். அய்யன் திருவள்ளுவர், ‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு’ என்று வரையறுத்தார். இன்று தமிழ்நாட்டில் ஓவாப்பிணி ஒன்று சூழ்ந்து மக்களை உலுக்குகிறது. அதனால் இயல்பாக உறுபசி பலருக்கும் உண்டாகி விட்டது.

கொரோனா என்கிற கொடுந்தொற்றின் கோர முகத்தை இயற்கை வெளிக்காட்டியிருக்கும் நேரத்தில், நிர்வாகப் பொறுப்பை நாம் ஏற்றிருக்கிறோம். இது கொண்டாடுகிற நேரமல்ல; திண்டாடுபவர்களுக்குத் தோள் கொடுத்துக் காப்பாற்ற வேண்டிய நேரம் என்கிற காரணத்தால்தான், இதை விழாவாக எடுக்காமல் பதவிப் பொறுப்பேற்கும் எளிய நிகழ்வாக வடிவமைத்தோம். அதற்கு உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றியினை உரித்தாக்குகிறேன். இத்தருணத்தில் நாம் எத்தகைய விழிப்புணர்வுடன் இருக்கிறோம் என்பது முக்கியம். உறக்கத்தில்கூட, உறங்காது உடனிருக்க வேண்டியது விழிப்புணர்வு. போர்க்களத்தில் இருக்கும் வீரன் ஒரு நொடி அயர்ந்தால்கூட எதிரிகளின் குண்டுகளுக்கு இரையாகி விடுவதைப்போல, நாம் ஒரு நிமிடம் சோர்ந்தாலும், அலட்சியமாக இருந்தாலும், அஜாக்கிரதையாக நடந்தாலும், கொடுந்தொற்றுக்கு இரையாகி  விடுவோம். எனவே எந்த நொடியிலும் எச்சரிக்கையுடன் இருப்போம்.

நெருக்கடியைத் தவிர்க்கும் தனி மனித இடைவெளி, மூக்கையும் வாயையும் எப்போதும் மூடியிருக்கும் முகக்கவசம், அடிக்கடி கைச்சுத்திகரிப்பு என்று நாம் கருத்துடன் கவனமாக இருந்தால், தொற்றைத் தோற்றோடச் செய்யலாம். முகக் கவசம் என்பது, அடுத்தவர்கள் கட்டாயத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல. அது நம்மைக் காத்துக்கொள்ள நாம் எடுக்கிற முன்னெச்சரிக்கை என்பதை நீங்கள் உணர வேண்டும். மே 7-ஆம் நாள் ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனப் பதவி ஏற்றாலும், தேர்தல் செய்திகள் வந்துகொண்டிருக்கும்போதே இத்தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தேன் என்பதையும், அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தமிழக ஊடகங்கள் மூலமாக நீங்கள்  அறிந்திருப்பீர்கள்.

This is not a DMK government: it is a Tamil Nadu government owned by all people... mk stalin

அந்தக் கலந்துரையாடலின் விளைவாக, மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கும்பொருட்டு இரு முக்கியக் கோப்புகளில் நான் கையொப்பமிட்டுள்ளேன்.இது வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்குக் கணிசமான உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். இதைத்தவிர மக்களுக்காக, ஆபத்துகளுக்கிடையே அனுதினமும் பணியாற்றுகிற ஊடகத் துறையினரை முன்களப் பணியாளர் என்று அறிவிக்கும் அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவிற்காக உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருமே உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

பொது மக்கள் அச்சம் தவிர்த்து, முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி  முழுமையான விழிப்புணர்வோடு ஒத்துழைப்பு வழங்கினால்,  நாம் விரைவில் இந்தக் கடுமையான சோதனையிலிருந்து வெளிவந்து, ஆக்கபூர்வமாக நற்பணிகள் ஆற்ற முடியும்; கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஒளியின் வேகத்தில் எடுக்கப்படும் என்பதை உறுதிகூற விரும்புகிறேன். 

நான் பணியேற்றிருக்கும் இந்த நேரத்தில் உடன்பிறப்புகளுக்கும் தமிழக மக்களுக்கும் உத்தரவாதம் ஒன்றை அளிக்க விரும்புகின்றேன். நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எப்போதும் பாடுபடும். கல்லூரிக் காலத்தில் படித்த ஷேக்ஸ்பியர் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வேளாண்மையையும், நாட்டு நிர்வாகத்தையும் ஒப்பிட்டுப் பயிர்களைப் பராமரிப்பதைப்போல மக்களின் உயிர்களைப் பராமரிப்பது மன்னனின் கடமை என்கிறார் அவர்.

நம் தமிழ்க் கவிச் சக்கரவர்த்தி கம்பர் ‘அவ்வளவு பெரிய கோசல நாட்டை தசரதன், சின்ன வயலுடைய உழவன் உன்னிப்பாகப் பராமரிப்பதைப் போல பராமரித்தான்’ என்று கூறுகிறார். உழவர்கள் தமது நிலத்தைப் பண்படுத்திக் காப்பதைப் போல, இந்த அரசு, தமிழ்நாட்டைப் பராமரிப்பதோடு உழவர்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் அரசாகத் திகழும்.

இது தி.மு.க. தலைவரான என் தலைமையில் அமைந்த அரசு என்றாலும், இது தி.மு.க. என்ற கட்சியின் அரசு அல்ல; எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாத - எல்லாப் பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்துச் செல்லும் - அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு; தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் தமிழக அரசு என்பதை அழுத்தமாக உணர்த்த விரும்புகிறேன். தேர்தல் என்பது மக்களாட்சியின் மாண்புகளுள் ஒன்று. அது போர்க்களமல்ல, ஜனநாயகக் களத்தில் எதிரெதிர் அணிகளாக மோதிக் கொள்வது இயல்பு என்றாலும், நாம் எல்லோரும்  ஒருதாய் மக்கள்.

This is not a DMK government: it is a Tamil Nadu government owned by all people... mk stalin

ஒரே இல்லத்தில் அண்ணன் ஒரு கட்சியிலும், தம்பி இன்னொரு கட்சியிலும் இருப்பதைக் காண்கிறோம். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மாற்றுக் கட்சித் தோழர்களோடும் நட்புணர்வுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகி, அவற்றுக்குத்  தீர்வு காண  முயல வேண்டும். எல்லா வகைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டுத் தமிழகத்தைத் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். எழுச்சி பெற்ற தமிழகத்தை நமது தலைமுறை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதைப் பொதுமக்களின் ஒத்துழைப்போடும், உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒத்துழைப்போடும், அலுவலர்களின் ஒருங்கிணைப்போடும் நிறைவேற்றுவோம் என்ற உயர்ந்த நம்பிக்கையுடன் உங்களோடு இணைந்து பணியாற்றவிருக்கிறேன். தமிழக மக்கள் தந்துள்ள வெற்றியை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கி, அவர் கற்றுத் தந்த அரசியல் - நிர்வாக அனுபவத்தின் துணைகொண்டு, சவால்களையும் நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிர்கொண்டு, தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை  வழங்கிடுவேன் என நான் உறுதியளிக்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios