உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் ஆன்மா மன்னிக்காது என காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது. ஆனாலும் அடுத்தடுத்து இழுக்கடிக்கப்பட்டே வருகிறது. 

இதையடுத்து இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் அதற்கான தேர்தல் அட்டவணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. 

இதைதொடர்ந்து தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. ஆர்.எஸ்.பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனிடையே அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் ஆன்மா மன்னிக்காது என தெரிவித்தார்.