முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது.
இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் என பல பாராட்டுகளைப் பெற்றாலும் பாராட்ட கலைஞர் இல்லையே என்ற ஏக்கம் துரத்துகிறது என சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருத்தத்துடன் கூறியுள்ளார். 50 ஆண்டுகள் திமுக தலைவராகவும், 19 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மிகப்பிரமாண்டமான அளவில் நினைவு தின நிகழ்ச்சியை நடத்த திமுகவினர் திட்டமிட்டனர்.

ஆனால் கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக, பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை தவிர்த்து அவரவர் வீடுகளில் கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் அவரது நினைவு தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துரைமுருகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கருணாநிதியில் பேரனும், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், எத்தனையோ பாராட்டுகள் கிடைத்தாலும் கலைஞரின் பாராட்டு இல்லையே என்பது வேதனையாக இருக்கிறது என தனது டுவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு பின்வருமாறு:- முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம் என கூறியுள்ளார்.
