this govt will continue or not ...minister discuss with officers
அதிமுகவில் அணி அணியாக பிரிந்து அதிகார போட்டி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? என்ற கவலை அனைத்து அமைச்சர்களையும் ஆட்டி படைக்கிறது என்பதுதான் கோட்டை வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.
முதல்வரும், அமைச்சர்களும் பெரும்பாலும் நாள் தவறாமல் தலைமை செயலகத்திற்கு வந்து விடுகின்றனர். ஆனால், வேலைதான் எதுவும் நடப்பதில்லை என்கின்றனர் அதிகாரிகள்.
இரண்டு நாட்களுக்கு முன், டெல்லியோடு நெருக்கமான தொடர்புடைய தமிழக அதிகாரி ஒருவரை, அந்த துறையின் அமைச்சர், தன்னுடைய அறைக்கு அழைத்திருக்கிறார்.
அவரும், முக்கிய கோப்புடன், அமைச்சர் அறைக்கு சென்றிருக்கிறார். துறை ரீதியாக அமைச்சர் ஏதாவது விவாதிப்பார் என்று எதிர்பார்த்து போன அதிகாரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆட்சி நிலைக்குமா? என்று அச்சமாக உள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் அதைப்பற்றி என்ன பேசி கொள்கிறார்கள்? என்று, ஏக்கத்துடன் கேட்டிருக்கிறார் அமைச்சர்.
அப்படி எல்லாம் ஆட்சி கலையாது சார். அதிகாரிகள் தரப்பில் அப்படி எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்று, அதிகாரி கூறி இருக்கிறார்.
அதற்கு, டெல்லியில் இருந்து எனக்கு தெரிந்த அதிகாரி ஒருவர் பேசினார். அவர் ஆட்சி நீடிக்காது என்று சொன்னார். அதுதான் கேட்டேன் என்று கவலையுடன் கூறி இருக்கிறார் அமைச்சர்.
மீண்டும் அமைச்சரை சமாதானப்படுத்திய அதிகாரி, கையில் எடுத்து சென்ற கோப்புகள் பற்றி பேசி இருக்கிறார். இப்போது இருக்கும் சூழ்நிலையில், அதை எல்லாம் பார்க்கும் மன நிலையில் இல்லை என்று அமைச்சர் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.
இதே மன நிலையில்தான் அனைத்து அமைச்சர்களும் இருப்பதாக, அதிகாரிகள் மட்டத்தில் பேசிக்கொள்வதாக, கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
