திருவாரூர் தொகுதியில் திடீர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமலே போட்டியிடுவாரா அல்லது வேறு வேட்பாளரை நிறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் எப்போது  இடைத்தேர்தல் நடந்தாலும் அதில் பெரும்பாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பின், அவர் சந்திக்க போகும் முதல் தேர்தலாக திருவாரூர் தேர்தல் மாறியுள்ளது. முதல் தேர்தலே மிக முக்கியமான ஒன்றாகவும் ஆகியுள்ளது.

இந்நிலையில் இத்தேர்தலில் கமல் போட்டியிட வாய்ப்புள்ளதா, அல்லது கட்சியில் புதிதாக இணைந்துள்ள இயக்குநர் அமீர் போன்று வேறு யாரையாவது நிறுத்தலாம் என்ற யூகங்கள் உலா வருகின்றன.

திருவாரூரைப் பொறுத்தவரை அது தி.மு.க.வின் கோட்டை என்பது ஒருபுறமிருக்க, முன்னாள் முதல்வரின் மறைவை ஒட்டி எழுந்துள்ள அனுதாப ஓட்டுக்களும் இம்முறை தி.மு.க.வுக்கு கணிசமாக விழும். அதனால் கமல் தானே களம் இறங்கி ரிஸ்க் எடுக்க வாய்ப்பு குறைவு. அதே சமயம் கஜா புயலில் களம் இறங்கி வேலை செய்த ஒரே சினிமா அரசியல்வாதி என்பதால் அதன் பலனை அறுவடை செய்யவும் விரும்புவார் என்பதால் அமீர் அல்லது வேறு ஏதாவது ஒரு சினிமா பிரபலத்தை இறக்கிவிட்டு கமல் தன் கட்சியின் பலத்தை பரிசோதிக்கக்கூடும் என்று தெரிகிறது.