திருவாரூரில் மையம் கொண்டு சுழன்றடித்து வருகிறது அரசியல் புயல். பல கட்சிகள் திருவாரூர் தொகுதியை குறி வைத்திருந்தாலும் திமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு மட்டுமே மும்முனை போட்டி. இதில் கரைசேரமுடியுமா என கலங்கும் சில கட்சிகள் திருவாரூர் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்திருக்கின்றன. 
 
திருவாரூர் தேர்தலுக்காக போட்டியிடும் நபர்களிடம் அனைத்து கட்சியினரும் விருப்ப மனுக்களை பெற்று வருவதால், அனைத்து நிர்வாகிகளும் அவர்களது ஆதரவாளர்களுடன் சென்னையில் குவிந்து வருகிறார்கள். தத்தமது கட்சி தலைவர்களை சந்தித்து எப்டியாவது சீட்டு வாங்கி விடவேண்டும் என முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்து இருக்கின்றன. தேமுதிக, பாமக பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. ஆனால், ’’தேர்தலில் நின்றே தீர வேண்டும் என்றும் நம் பலம் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த இடைத்தேர்தல் உதவும் என்று தமிழக பாஜக நிர்வாகிகள் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், சிலரோ, டெபாசிட் இழந்தால் அது மக்களவை கூட்டணிக்கு நாம் பேசி வரும்கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒற்றை இலக்கத்தில் தான் சீட் கிடைக்கும். அல்லது நம்மிடம் கூட்டணி வைக்கவே  மற்ற கட்சிகள் யோசிக்கும். அதனால், இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம்’’ என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். மற்றொரு புறம் மத்திய உளவுத்துறையும், ’மத்திய ஆட்சி மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அது தேர்தலில் எதிரொலிக்கும்’’ என்கிற அறிக்கையை ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் பாஜக முக்கியமான ஒரு காரணத்தை சொல்லி திருவாரூர் தேர்தலை புறக்கணிக்கப் போகிறது என்கிறார்கள். 

திருவாரூரில் பாஜக பின்வாங்குவதை அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பேச்சும் உறுதி செய்திருக்கிறது. அவர் கூறிய ஒரு பேட்டியில், ‘’திருவாரூர் தொகுதி தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வோம் என்பதை பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. எங்களுடைய முழு கவனம் மோடி வருகை, மக்களவை தேர்தலை சந்திப்பதில் தான் இருக்கிறது’’ எனத் தெரிவித்து இருக்கிறார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட, பாஜ குறைந்த அளவே ஓட்டுக்கள் பெற்றது. அந்த சோகத்தை அத்தனை எளிதில் மறந்து விடுமா பாஜக..?