Asianet News Tamil

திருவள்ளுவருக்கு காவி உடை, குடுமி வைத்து ஆரிய சிந்தாந்தவாதியாக மாற்ற துடிப்பதா..? வைகோ எச்சரிக்கை..!

திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சிந்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

Thiruvalluvar to put on a saffron dress, apex to beat the Aryan ideologue to beat ..? Turbulent Vaiko.!
Author
Chennai, First Published Feb 21, 2021, 8:54 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தர்மத்தை நிலைநிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் கூட்டம், திருவள்ளுவரை தம்வயப்படுத்த முனைந்து நிற்கின்றது. முப்பால் வழங்கிய செந்நாப் போதார் திருவள்ளுவரை, ‘சீவலப்பர்’ என்று பெயர் சூட்டிய இக்கூட்டம், திருக்குறளையே ‘ஆரியச் சித்தாந்தச்’ சிமிழுக்குள் அடக்கிவிட ஆயிரம் ஆண்டுகளாக முயற்சி செய்தது.
சமஸ்கிருத தர்ம சாத்திரம்தான், முப்பாலில் ஒன்றாகிய அறத்துப்பால் என்றும், அர்த்தசாஸ்திரம்தான் பொருட்பால் என்றும், காம சூத்திரம்தான் இன்பத்துப்பால் என்றும் கதை கட்டிப் பார்த்தது. திருக்குறள் உரை ஆசிரியர்களுள் ஒருவரான பரிமேலழகர் தம் ஆரியக் கருத்துகளைத் திணித்தார். ஆனால், சனாதனக் கூட்டம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், காலப்போக்கில் முனை மழுங்கிப் போய்விட்டன. புகழ்பெற்ற ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்து வெளியிட்ட திருவள்ளுவரின் உருவப் படத்திற்குத்தான், தமிழக அரசு ஏற்பு அளித்து இருக்கிறது. அந்தப் படம் வரைந்ததற்கான விளக்கம் அளித்து, வேணுகோபால் சர்மா வழங்கிய கருத்தை, சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறிய வெளியீடாகக் கொண்டு வந்தது.
“திருவள்ளுவர் கருத்து உலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரைச் சுற்றி, அறிவு ஒளி மட்டும் இருக்குமாறு உருவம் வரையப்பட்டது. தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு ஆகியவற்றைக் கொண்டு இருப்பதால் திருவள்ளுவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டது. உச்சிக்குடுமியும், வெட்டப்பட்ட சிகையும் பல இனக்குழுக்களுக்கு அடையாளம் ஆகி விட்டதால், திருமுடியும் நீவப்படாத தாடியும் இருப்பது போல வரையப்பட்டது” என்று, ஓவியர் வேணுகோபால் சர்மா விளக்கம் அளித்து இருக்கிறார்.

இன்று அரசியல் அதிகாரத்தைக் கைக்கொண்டு இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் தமிழ்நாட்டில் கால் ஊன்ற திருவள்ளுவரை ஒரு கருவி ஆக்கத் துடிக்கின்றன. கடந்த 2019 நவம்பரில், தமிழக பாஜக ‘ட்விட்டர்’ பக்கத்தில் காவி உடையில் விபூதி அணிந்த திருவள்ளுவர் படத்தை வெளியிட்டார்கள். இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் கைப்பாவை ஆகிப்போன அதிமுக அரசு, கடந்த 2020 டிசம்பரில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சியில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் திருப்பணியைச் செய்தது. பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தமிழகமே கொந்தளித்துக் கண்டனம் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாட நூலில் திருவள்ளுவரை உச்சிக் குடுமியுடன் சித்தரித்து படம் வெளியிட்டு, இழிவுபடுத்தி உள்ளனர். இச்செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
திருவள்ளுவர் படம் வரைந்து, நாகேஸ்வரபுரத்தில் ஒரு இல்லத்தில் வேணுகோபால் சர்மா வைத்து இருந்தபோது, காமராஜர், அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி உள்ளிட்டத் தலைவர்கள் பார்வையிட்டுப் பாராட்டினார்கள். அந்த உருவப்படம், 1964 மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் முன்னிலையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் உசைனால் திறந்து வைக்கப்பட்டது. அண்ணா, கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் ஏற்பு அளிக்கப்பட்ட திருவள்ளுவரின் உருவப்படம், தமிழக அரசு அலுவலகங்களிலும், அரசுப் பேருந்துகளிலும் இடம் பெறச் செய்யப்பட்டது என்பதுதான் வரலாறு.
திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சிந்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும். மத்திய அரசு உடனடியாக சிபிஎஸ்இ பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழக அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் திருஉருவப் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios