வழக்கமான நிலத்தகராறு விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு என்று வெளியான தகவலால் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு பெரிய அளவில் சிக்கல்கள் இருக்காது என்றே தகவல்கள் வெளியாகின ஆனால் நிலைமை தற்போது சீரியஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.

திருப்போரூர் காட்டுப்பகுதியில் மான் வேட்டை நடைபெறுவதாக பல ஆண்டுகளாக புகார்கள் உள்ளன. வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து பல்வேறு விஐபிக்கள் தங்களின் ஜீப் வகை வாகனங்கள் மூலம் காட்டுக்குள் செல்வதாகவும் அவர்கள் மறு நாள் காலை அல்லது பிற்பகலில் திரும்புவதாகவும் திருப்போரூர் அருகே உள்ள செம்பூர் கிராம மக்கள் தற்போது கூறுகின்றனர். ஆனால் எம்எல்ஏ இதயவர்மன் கைதுக்கு பிறகு விஐபிக்கள் யாரும் தற்போது காட்டுப்பகுதிக்குள் தென்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தும் அதிநவீன துப்பாக்கி என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த வகை துப்பாக்கிகள் மூலம் காட்டில் உள்ள வன விலங்குகளை வேட்டையாட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதயவர்மன் வீட்டில் ஏராளமான பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டுகள் சிக்கியுள்ளன என்றும் போலீசார் கூறுகின்றனர். இந்த குண்டுகள் எதற்கு பயன்படுத்தப்பட்ட என்பதை கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே எம்எல்ஏ இதயவர்மன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மீண்டும் அந்த மனு விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் ஒன்று ஜாமீன் மனுவை ஏற்று இதயவர்மனை நீதிமன்றம் விடுவித்திருக்கலாம், அல்லது ஜாமீன் மனுவை ரத்து செய்திருக்கலாம். ஆனால் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தொடர்ந்து 3 முறை ஒத்திவைத்ததற்கு காரணம் போலீசாரின் வேண்டுகோள் தான் என்கின்றனர். இதயவர்மனுக்கு எதிராக வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும் அதனை தடயவியல் நிபுணர்கள் மூலம் உறுதிப்படுத்தினால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முகாந்திரம் கிடைக்கும் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதனால் தான் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தொடர்ந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் கோரிக்கை வைத்து வருவதாகவும் சொல்கிறார்கள். இதனிடையே இதயவர்மன் வீட்டில் கிடைத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டுகளின் தடயவியல் சோதனை முடிவுகள் இன்று கிடைத்துவிடும் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது. அதனை நீதிமன்றத்தில தாக்கல் செய்து இதயவர்மனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

மேலும் தடயவியல் சோதனையின் அடிப்படையில் இதயவர்மன் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யவும் போலீசார் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இநத் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அது இந்திய அளவில் பேசப்படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக இருக்கும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் இதயவர்மனுக்கு எதிராக போலீசார் புதிய ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.