திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் தினகரனின் அமமுக சார்பில் சீமானின் மச்சான் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுவது உறுதி என்று தகவல் வெளியாகியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ போஸ் கடந்த ஆறு மாத காலமாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் காலமானதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்தது முதல் ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.

 அந்த வகையில் ஏ.கே.போஸ் காலமானதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு விரைவில் கடிதம் எழுதுவார். அதன் பின்னர் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் சமயத்தில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட தற்போதே அரசியல் கட்சிகளில் பலர் துண்டு போட்டு வைக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டனர். மற்ற கட்சிகள் எப்படியோ ஆனால் தினகரனின் அமமுகவை பொறுத்தவரை திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரைக்கு தான் வாய்ப்பு என்கிறார்கள். ஏனென்றால் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே காளிமுத்து எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். 

 மேலும் கடந்த 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காளிமுத்துவின் மகன் டேவிட், பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் டேவிட் அண்ணாதுரைக்கு தான் தினகரன் சீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.கவை பொறுத்தவரை மறைந்த ஏ.கே.போஸின் மூத்த மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம் அ.தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியனும் திருப்பரங்குன்றம் தொகுதியை குறி வைத்துள்ளார். தி.மு.கவை பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்ட டாக்டர் சரவணனுக்கே வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.