ஓபிஎஸ்க்காக மு.க.ஸ்டாலின் காத்திருந்தாரா? என்ற கேள்விக்கு தான் உண்மை தெரியாமல் பதில் சொல்ல முடியாது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை சத்திய மூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அனைத்து தமிழ் மக்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பு, சாதி, அனைவரும் நலமும் வளமும் பெற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன். தமிழகத்தில் தேசிய உணவுபாதுகாப்பு சட்டம் அமல்படுத்த இருப்பதற்கு காங்கிரஸ் சார்பில் அரசுக்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்.
பால் உற்பத்தியாளர்களுக்கு மற்ற மாநிலம் போல மானியம் வழங்க வேண்டும், அதேவேளையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அரசு பார்த்து கொள்ளவேண்டும். சிப்பெட் தலைமையிடம் மாற்றப்படாது என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார், அதை அரசு ஆணையாக வெளியிட வேண்டும்.
ஆம்னி பஸ் கட்டணம் முறைப்படுத்த வேண்டும், கடந்த ஆண்டு வசூலித்தை போல் இருக்க வேண்டும், பஸ் கட்டணத்தை உயர்த்த கூடாது. தீபாவளி சமயம் என்பதால் அரசு மக்களின் பயன்பாட்டுக்காக மேலும் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை சமயத்தில், அரசு ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும், அது தொடர்பாக அரசு தடுமாறாமல் நிலையான முடிவை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தார் .
மூன்று தொகுதி இடைதேர்தலில் காங்கிரசின் நிலைபாடு பற்றி கேட்டபோது ,
இடைதேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது , திமுக தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் பாடுபடும் , தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதியிலும் திமுக.வுக்கு பிரச்சாரம் மேற்கொள்வேன். தேர்தல் நடக்கும் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் தலைமையில் தேர்தல் குழு நாளை அறிவிக்க உள்ளோம் அந்த குழுவில் உள்ளவர்கள் திமுக.வுடன் சேர்ந்து வெற்றிக்கு உழைப்பார்கள்.
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் நாற்பத்தைந்து நிமிடம் காத்திருந்து நிதியமைச்சரை சந்திக்க முடியாமல் திரும்பி உள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர் . இதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர் இதை குறித்த உண்மை நிலவரம் தெரியாமல் கருத்து சொல்ல முடியாது , நேரில் பார்க்காமல் அதைப்பற்றி நான் என்ன கருத்து தெரிவிக்க முடியும் என மறுத்துவிட்டார்.
