தமிழக காங்கிரஸின் தற்போதைய தலைவர் திருநாவுக்கரசருக்கும், மாஜி தலைவர் இளங்கோவனுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர்  டெல்லி வரை பிரசித்தம். எப்படியாவது திருநாவுக்கரசரை அந்தப் பதவியிலிருந்து இறங்க வைத்தே தீருவது என்று இளங்கோ சபதம் போட, ‘நாடாளுமன்ற தேர்தல் வரை நான் தான் தலைவர். யாரும் என்னை எதுவும் பண்ண முடியாது!’ என்று சொடுக்குப்  போட்டிருக்கிறார் அரசர். 

இந்நிலையில் இவர்கள் யுத்தம் உச்சத்தை தொட்டது சமீபத்தில். சத்தியமூர்த்தி பவனில் நடந்த ‘சக்தி’ திட்ட துவக்க விழாவில் அரசரும், இளங்கோவனும் மேலிட பார்வையாளர்கள் எதிரிலேயே கன்னாபின்னாவென மோதிக்கொண்டனர். அந்த விழாவில் தன்னை மேடையில் பேச விடாமல் செய்து அவமானப்படுத்திவிட்டார் திருநாவு என்று இளங்கோவனுக்கு கடும் கோபம். 

இந்நிலையில் ‘இனி நாம் சத்தியமூர்த்தி பவனுக்குள் போக வேண்டாம்’ என்று இளங்கோவனின் ஆதரவாளர்கள் ஆத்திரப்பட, அதற்கு ‘அவரை பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு நாம்  சந்தோஷமாக உள்ளே போவோம்! நான் விரைவில் டெல்லி போய் அதற்கான வேலைகளை செய்கிறேன்.’ என்று கெத்தாக பேசியுள்ளார் இளங்கோவன். உடனே “தலைவர் ராகுல் மனசு வைத்தால்தான் அரசரை பதவியிலிருந்து இறக்க முடியும். ஆனால் அவர் இளங்கோவனுக்கு அப்பாயிண்ட்மெண்டே தருவதில்ல. பிறகு எப்படி அரசரை தூக்குறது?’ என்று குழம்பியுள்ளனர். 

ஆனால் இளங்கோவனோ ராகுலின் பிரம்மாஸ்திரத்தையே தன்னுடைய பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தும் முடிவில் இறங்கி மளமளவென காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். யெஸ், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி.யை வீழ்த்திட தனது பிரம்மாஸ்திரமாக ராகுல் நம்புவது பிரியங்காவை தான். அவருக்குதான் ‘நீ அரசியலுக்கு வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்து, அவரை பொதுச்செயலாளராகவும் நியமித்துவிட்டார் ராகுல். மோடிக்கு எதிரான லேடி வெடி! என்று தேசமே அவரை விளிக்கிறது. 

அதே பிரியங்காவைத்தான் இளங்கோவனும் நம்புகிறார் தன் முயற்சிக்கு. ராகுல் தனக்கு அப்பாயின்ட்மெண்ட் தராத பட்ச்த்தில், கட்சியில் தேசிய பொறுப்பில் இருக்கும் குஷ்புவின் செல்வாக்கை பயன்படுத்தி, அவரை  பிரியங்காவை நெருங்கவைத்து அரசர் மாற்றப்பட வேண்டிய அவசியத்தை அவருக்கு தெரிவிக்கும் மூவ்களில் இருக்கிறார் இளங்கோவன். கட்சியில் செல்வாக்கானவர், நடிகை, சரளமாக இந்தி தெரிந்தவர்! என்று ஏகப்பட்ட பாஸிடீவ் விஷயங்களைக் வைத்திருக்கும் குஷ்பூவின் மூலம் இது நிச்சயம் சாத்தியப்படும் என்று தாறுமாறாக நம்புகிறார் இளங்கோவன். 

வரும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பிரியங்கா காந்தி தமிழகத்தில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று டெல்லியில் ஃபார்மல் ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது. அதற்குள் அரசரை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று டார்கெட்டுக்கு டைமே செட் செய்துவிட்டார் இளங்கோவன். இதற்கு முழு சம்மதத்துடன் குஷ்பூவும் ஃபுல் ஸ்விங்கில் களமிறங்கியிருக்கிறார். ராகுல் நிழலில் நிற்பதால் நமக்கு பயமே இல்லை! என்று நினைத்திருந்த அரசருக்கு இளங்கோ - குஷ்பூவின் இந்த புது ரூட் கிலியை கிளப்பியுள்ளது.