முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம் பெற்ற நிலையில், வெளிநாட்டில் 100 டாலர்கள் தந்தால் டாக்டர் பட்டம் தர நிறைய பேர் உள்ளனர் என்று திருச்சி எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் மத்திய, மாநில அரசுகளின் மீது கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். இதுவரை எந்த வாக்குறுதிகளையும் இந்த அரசுகள் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்துவருகிறார்கள்.
இந்தியா முழுவதும் தேர்தலில் பணப் பட்டுவாடா கலாச்சாரம் பரவி வருவது வருந்தக்கூடியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எல்லா அரசியல் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும். அதைத் தடுக்க தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. எனவே தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஜெயலலிதா இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்.  அவர் மறைந்த பிறகு இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களை அழைத்து அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இரங்கல் கூட்டம் நடக்கவில்லை. ஜெயலலிதாவுக்காக எடப்பாடி, பன்னீர்செல்வம் என்ன செய்துள்ளனர்? மருத்துவமனையில் இருந்தபோதும் அவரை சரியாக கவனிக்கவில்லை.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இந்த ஆட்சி முடிந்ததும் கட்சியைத் தொடங்குவாரா அல்லது ஆட்சி இருக்கும் போதே தொடங்குவாரா என்பதை ரஜினிதான் சொல்ல வேண்டும். டாக்டர் பட்டத்தை நிறைய பேர் வைத்திருக்கிறார்கள். 100 டாலர்கள் தந்தால் வெளிநாட்டில் டாக்டர் பட்டம் தர நிறைய பேர் இருக்கிறார்கள். முதல்வர் டாக்டர் பட்டம் வாங்குவது கண்டிக்க கூடியதும் இல்லை. பாராட்டக்கூடியதும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி டாக்டர் பட்டம் வாங்குவதைவிட மக்களிடம் பாராட்டுகளை வாங்க வேண்டும்” என திரு நாவுக்கரசர் தெரிவித்தார்.