கிரிமினல் வழக்குகளை வைத்திருக்கும் இந்துமுன்னணி கொடி மட்டும் விநாயகர் சதூர்த்தி விழாவில் எப்படி இங்கே வந்தது? என குமுறியுள்ளார் திருமுருகன் காந்தி. 

சமூக போராளியான திருமுருகன் காந்தி இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘’விநாயகர் சதூர்த்தி எனும் பெயரில் சிலைகளோடு இந்துமுன்னணி கொடி பறப்பது ஏன்? அரசியல் முழக்கங்கள் விநாயகர் சிலையோடு வைக்கப்படுகிறது. நடப்பது பண்டிகையா? அரசியல் மாநாடா? கோவில்களுக்குள் அரசியல் கட்சி கொடி எப்போது நுழைந்தது? நம் கோவில்களுக்குள் கட்சி கொடிகளை நாம் அனுமதித்திருக்கிறோமா?

 

அதிமுக- திமுக- பாமக- தேமுதிக போன்ற பிரதான கட்சிகளின் பிரமுகர்கள் கோவில் விழாக்களுக்கு பெரும் நிதியை பங்களிப்பு செய்தாலும் தங்கள் கட்சி கொடியை கோவிலோடும், சாமி சிலைகளோடும் சேர்த்து வைப்பதில்லை. ஆனால், கிரிமினல் வழக்குகளை வைத்திருக்கும் இந்துமுன்னணி கொடி மட்டும் இங்கே எப்படி வந்தது?

மாரியம்மன், அய்யனார் கோவில்களுக்கு பல கட்சி- இயக்கங்களைச் சேர்ந்த அனைவரும் பங்களித்தாலும் நம் கொடிகள் அங்கே பறப்பதில்லை. கோவிலில்  பெரிய கட்சிகள் அரசியல் செய்வதில்லை. ஆனால், இந்த வன்முறை கும்பல் சிலைகளை வைத்து அரசியல் செய்வதை பிற கட்சிகள் ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன?

ஓட்டு வாங்க பாஜக, சாமி சிலைகளை வைத்து அரசியல் செய்ய இந்து முன்னணி, பயிற்சி அளிக்க ஆர்.எஸ்.எஸ், கலவரம் செய்ய வேறொரு அமைப்பு. இதுதவிர கட்சிகளுக்குள் பாஜக சிலீப்பர் செல்களாய் அமைச்சர்கள். மக்கள் இந்த சதி-நாடகங்களை எவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கப் போகின்றனர்?’ என அவர் குமுறியுள்ளார்.