சாதி பெருமை பேசும் நீங்கள் ஹெட்ரோ கார்பன் திட்டதை எதிர்த்து போராட தயாராக இருக்கிறீர்களா? மக்கள் பிரச்சனைகளில் அமைதியாக இருந்துவிட்டு தலைவர்களின் தலையை வெட்டுவதால் ஒன்றும் சாதிக்க முடியாது என திருமுருகன் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு திருமுருகன்காந்தி காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார். அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் மீண்டும் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடரக் கூடாது. ஆனால், தற்போது அம்பேத்கர் சிலை எதற்காக உடைக்கப்படுகிறது. அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சாதி வளையத்திற்குள் அடைக்க முற்படும் நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 

அவர் எதற்காக, யாருக்காக போராடினாரோ அதையெல்லாம் எப்படியாவது அழித்து விடலாம் என்ற நோக்கில் குறிப்பிட்ட நபர்கள் அவரின் சிலையை உடைப்பதன் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எண்ணம் எப்போதும் நிறைவேறப்போவதில்லை. அவர்கள் ஏமாறப்போவது நிச்சம். வரலாற்றை நாம் மாற்றிவிட முடியாது. பெரியார் சிலையோ அல்லது அம்பேத்கர் சிலையோ கடவுள் விக்ரகங்கள் இல்லை. உடைந்தால் அதன் சிறப்பு தன்மை கெட்டுவிட. அவர்கள் தலைவர்கள். வெட்ட வெட்ட முளைப்பார்கள்.

சமூகத்தில் பின்தங்கி இருந்தவர்களுக்கு காலங்காலமாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இதனை உடைத்தெறிந்துவிட்டு அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர்கள் இவர்கள். அவர்களை சிறுமைப்படுத்தலாம் என்று நினைப்பவர்கள்தான் சிறுமைப்பட்டு போவார்கள். இந்த நூறு வருட காலத்தில்தான் பல மாற்றங்கள் நிகழ்த்துள்ளது. சாதியின் பெயரால் அடிமைப்பட்டு கிடந்த அவர்கள் இந்த கால கட்டத்தில்தான் மருத்துவராக, வழக்கறிஞராக, ஆசிரியர்களாக வந்தார்கள். 

இவ்வாறு மக்களின் முன்னேற்றத்துக்கு காரணமான அவர்களை அழிக்க நினைப்பது என்பது ஒருகாலும் வெற்றிபெறாது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக காலம் முழுவதும் போராடிய தலைவர்களின் தலையை சிதைப்பதன் மூலம் என்ன பெற்றுவிட போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆண்ட சாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். பள்ளிகளுக்கு சென்றீர்களா? அரசு வேலைக்கு போக முடிந்ததா? இதை எல்லாம் மாற்றியது யார்? நீங்கள் யார் தலையை வெட்ட துடிக்கிறீர்களோ அவர்கள் செய்ததுதான். சாதி பெருமை பேசும் நீங்கள் ஹெட்ரோ கார்பன் திட்டதை எதிர்த்து போராட தயாராக இருக்கிறீர்களா? மக்கள் பிரச்சனைகளில் அமைதியாக இருந்துவிட்டு தலைவர்களின் தலையை வெட்டுவதால் ஒன்றும் சாதிக்க முடியாது.