திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆனதற்கு காரணம் கருணாநிதி போட்ட பிச்சை என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்டாலும் இந்த சர்ச்சை அடங்கவில்லை. 

இதுகுறித்து திருமாவளவன் அமைதியாக இருப்பதற்கு காரணம் கூட்டணி பயமா? வரும் சட்டமன்றத் தேர்தலா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து அம்பேத்கர் சமத்துவ இயக்கம் திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதில், ’’தோழர் திருமாவளவன் அவர்களுக்கு, ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை கேட்டீர்களா? கேட்டும் கேட்காததுபோல இருப்பது ஏனோ?

கண்டன அறிக்கை கூட விட தயங்கும் உங்களை "தலீத் மக்களின் தலைவர்" என்று நம் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்களே. அந்த நம்பிக்கை பொய்தானா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது. ஆர்.எஸ்.பாரதி பற்றி திருமாவளவன் எதுவும் பேச மாட்டார் என தெரியும். ஆனால், ரஞ்சித் சார் கூட கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது’’எனத் தெரிவித்துள்ளனர்.

’’அதிகாரம் மட்டுமே எம்மக்களின் துயரை துடைக்கும்; அந்த அதிகாரம் இன்று அரசியலில் மட்டுமே குவிந்து கிடக்கிறது. ஆகவேதான் இந்த அருவறுப்பான அரசியலில் பல இழிவுகளை தாங்கி கொண்டு அரசியல் செய்கிறேன்!" என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளதை போல ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றும் வெளியாகி வலம் வருகிறது.