டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது குறித்து தனது விமர்சினத்தினை நடிகர் ரஜினிகாந்த் முன்வைத்துள்ளார். அவரது கருத்துக்குப் பலரும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ரஜினிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
தேசிய அளவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு முடக்க ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டது. இதன் காரணமாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்கான கடைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல், அரசு விதித்திருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்தது. அதன் தொடரச்சியாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து, மே 7 ஆம் தேதி அவை திறக்கப்பட்டன. பல தரப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில், டாஸ்மாக் திறப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

‘கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், அரசு உத்தரவிட்டுள்ள சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதில்லை' என்று ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் வாதம் வைத்தது மய்யம் தரப்பு. இதை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் ரஜினிகாந்த் “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவு கூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்”என கருத்து தெரிவித்து இருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள தொல். திருமாவளவன், “வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கருத்து விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. முழுஅடைப்பின்போது  மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசை அவரால் வெளிப்படையாகக் கண்டிக்க இயலவில்லையே ஏன்? மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமா என்ன?”எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.