உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் அதிமுகவுக்கு தனித்து போட்டியிட திராணி இல்லை என்று கூறி வருகின்றனர். மேலும், பாஜக, கமல், ரஜினி, அழகிரி உள்ளிட்ட தலைவர்களும் அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். 

இந்நிலையில், ராஜபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயார். இதேபோல் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தயாரா? தனித்து போட்டியிட்டால் அவர்களுடைய திராணி என்னவென்று தெரிந்துவிடும். திமுக கூட்டணியில் நிறைய பிரச்சனைகள் உள்ளதால் விரைவில் கூட்டணி உடையும். ஆனால், அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை.

மேலும், பேசிய அவர் ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தாலும் அவரது ரசிகர்கள் சேரமாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்சனைகள் உள்ளன. ரஜினி கமல் ஒரு முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். திருமாவளவன் எதேர்ச்சையான வார்த்தையில் தான் கோயில் குறித்து பேசி இருப்பார். அவர் வார்த்தைக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என தெரிவித்தார். தன்னை ஆன்மீக வாதியாக காட்டிக்கொள்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்து கோயில்களை பற்றி திருமாவளவன் இழிவாக பேசியதற்கு பாஜக உள்ளிட்ட நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி திடீரென திருமாவளவனுக்கு ஆதரவாக பேசியுள்ளது பாஜக வட்டாரத்தை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.