வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துவதற்கு மருத்துவர் ராமதாஸ் தயாராகி வருகிறார் என்பதைத்தான் அவரது அறிக்கை புலப்படுத்துகிறது என ராமதாஸ் பகீர் தகவலை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

பொன்பரப்பி வன்கொடுமையைக் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர் எஸ்றா சற்குணம்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோரை மிரட்டும் தொனியில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் . அவர்கள் இருவரும் வன்னியர் சமூகத்தைப் பற்றிப் பேசாதவற்றையெல்லாம் பேசியதாகப் புனைந்துரைத்து சாதிரீதியாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவரது அறிக்கை உள்ளது. அவர் அறிக்கை வெளியிட்ட பிறகு, குறிப்பாக தோழர் இரா முத்தரசன் அவர்களுக்கு பாமக தரப்பிலிருந்து தொலைபேசியில் மிரட்டல்களும் ஆபாச வசைகளும் வந்த வண்ணம் உள்ளதாக அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சனநாயகத்துக்குப் புறம்பான இத்தகைய அநாகரிகப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நீதிக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்களை மிரட்டுவதன்மூலம் சனநாயகச் சக்திகளின் ஒற்றுமையைச் சிதைத்துவிடலாம் என்றும் விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்திவிடலாம் என்றும் கணக்குப் போடும் பாமகவின் தந்திரம் பலிக்காது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். 

இப்படி சாதியின் பெயரால் வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் மருத்துவர் ராமதாசின் வெறுப்பு அரசியலுக்கு தமிழக அரசு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வாக்குப்பதிவுக்கு முன்பு வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற விதத்தில் மருத்துவர் ராமதாசும் அவரது மகன் அன்புமணி ராமதாசும் பேசிய பேச்சுக்களை தேர்தல் ஆணையமும் துறையும் காவல் பொருட்படுத்தி இருந்தால் இன்று பல இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடும் நிலை ஏற்பட்டிருக்காது. ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் இருவரும் தேர்தல் விதிகளுக்கும், சட்டங்களுக்கும் புறம்பாக வன்முறையைத் தூண்டி வருகிறார்கள். அதைத் தமிழக அரசு தொடர்ந்து அனுமதிப்பது வேதனை அளிக்கிறது.

பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துவதற்கு மருத்துவர் ராமதாஸ் தயாராகி வருகிறார் என்பதைத்தான் அவரது அறிக்கை புலப்படுத்துகிறது. இதை அலட்சியப்படுத்தாமல் தமிழக அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களுக்கும், தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.