சென்னை அடையாறிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், “பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் இணைந்து நந்தீஸ்-சுவாதி படுகொலை குறித்து குறைந்தபட்சம் கண்டனக் குரல்கூட ஏன் எழுப்பவில்லை. நீங்கள் இருக்கும் கட்சி உங்களை பேசவைக்காது. யாரால் மக்கள் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்களோ, அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையெனில் நீங்கள் எதற்கு பட்டியலினத்திலிருந்து எம்.எல்.ஏ.வாக எம்.பி.யாக ஆக வேண்டும்?

பட்டியலினத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பட்டியலின மக்களின் பிரச்சினைகள் குறித்து குறைந்தபட்சம் ஆதரவு தெரிவிக்கக் கூட மறுக்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியம் இல்லை. பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவோரை நாம் அனுப்புவோம்.

வரும் மக்களைவைத் தேர்தலில் 7 தனித் தொகுதிகளில் மட்டும் வேலை செய்வோம். தலித் அமைப்புகளுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்கி, அங்கு தேர்தலில் போட்டியிட வைப்போம். ஏழு தொகுதிகளிலும், ஏழு கட்சிகள் ஒவ்வொரு இடங்களில் நிற்கட்டும். ஏழு கட்சியினரும் ஏழு தொகுதிகளில் வேலை செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும் ஏழு பேரும் பட்டியலின மக்களுக்காக கண்டிப்பாக பேசிதானே ஆக வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.

இதற்க்கு பதில் சொல்லும் விதமாக  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து, “ எஸ்.சி கட்சிகள் சேர்ந்து சாதி அடிப்படையில் கூட்டணி அமைக்கவேண்டும்' என்ற பேச்சு ஆபத்தானது. அது தலித்துகளுக்கு எதிரான திரட்சிக்கே வழிவகுக்கும். சாதியாகத் திரள வேண்டும் என்பது சனாதனவாதிகளின் ஆலோசனை. பாமகவை வைத்து செய்த சோதனையை இப்போது தலித் கட்சிகளை வைத்து செய்யப் பார்க்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் இதுபற்றிக் கருத்துக் கேட்டனர். அப்போது அவர்,. “தேர்தல் அரசியலை அரசியலாகத்தான் அணுக முடியும். சாதியாக அணுக முடியாது. அவ்வாறு அணுகினால் இந்த சமூகம் தனிமைப்பட்டுப் போகும்” என்று பதிலளித்தார்.

 யாரால் மக்கள் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்களோ, அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையெனில் நீங்கள் எதற்கு பட்டியலினத்திலிருந்து எம்.எல்.ஏ.வாக எம்.பி.யாக ஆக வேண்டும்? என ரஞ்சித்தின் தெளிவான சிந்தனையை ஏற்றுக்கொள்ளாமல் இப்படி மழுப்பல் பதிலால் தலித் மக்களே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தனது ஜாதி இளைஞர்களை அடக்குமுறை ஒடுக்குமுறை என உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவர்களை ஜாதிவெறியை தூண்டி இன்னும் அதே பழைய நிலையில் வைத்திருக்கும் சில தலைவர்களின் முகத்திரையை கிழித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் ப.ரஞ்சித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.