திமுக பொதுக்குழு முடிந்த கையோடு உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு பணிகளை துவங்கியுள்ளார் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல் இழுத்துக் கொண்டிருக்காமல் சட்டு புட்டென்று பேசி முடித்துவிட ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இதனால் கடந்த முறை பிரச்சனை செய்தவர்களை அழைத்து முதலில் டீலிங்கை க்ளோஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் முதலில் திருமாவிற்கு அழைப்பு சென்றது.

சரியாக காலையில் ஸ்டாலின் சொன்ன நேரத்திற்கு திருமா ஆஜர் ஆனார். உள்ளாட்சி தேர்தலில் என்ன எதிர்பார்க்குறீங்க என ஸ்டாலின் சிரித்துக் கொண்டே கேட்க, உடனடியாக தான் கையோடு கொண்டு வந்திருந்த கடிதத்தை கொடுத்துள்ளார் திருமா. அதில் மேயர் பதவி ஒன்று என ஆரம்பித்து நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி தலைவர் என 5 சதவீதத்தை குறித்துள்ளார்.

அதாவது அனைத்து பதவிகளிலும் தங்களுக்கு 5 சதவீதம் வேண்டும் என்று திருமா தனது விருப்பத்தை ஸ்டாலினிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை படித்துக் கூட பார்க்காத ஸ்டாலின் மேயர் பதவி ஒன்று என போட்டுள்ளதை பார்த்த உடன் அதிர்ச்சியாகி அப்படியே திருமாவை பார்த்துள்ளார். தங்கள் கட்சியில் இருந்து இதுவரை யாரும் மேயர் ஆகவில்லை, அதனால் தான் என திருமா கூற, சரி பார்க்கலாம் என கூறிக் எழுந்துள்ளார் ஸ்டாலின். தொடர்ந்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திருமா பாணியில் ஒரு மேயர் என ஆரம்பிக்க அவர்களுக்கும் அதே பதிலை கூறியுள்ளார் ஸ்டாலின்.

ஆனால் மேயர் பதவிகள் அனைத்தும் திமுகவிற்கு தான் என அக்கட்சி வட்டாரங்கள் முடிவெடுத்துள்ளன. நெல்லை அல்லது சேலம் இரண்டில் ஒரு மாநகராட்சி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படலாம். மற்றபடி காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத இடங்கள் தான் என திமுக தரப்பு கூறுகிறது. மற்ற அனைவருக்கு தலா 2 சதவீதம் என மொத்தமே 15 சதவீதத்திற்குள் கூட்டணியை முடித்துவிட ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.