என்ன நினைச்சிட்டு இருக்கீங்க…? சேறு, சகதியை பாக்காத கால் என் காலா…? திருப்பியடித்த திருமாவளவன்…
என் கால்கள் சேறு, சகதியை பார்க்காத கால் அல்ல என்று தம்மை பற்றி வெளிவரும் விமர்சனங்களுக்கு அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
என் கால்கள் சேறு, சகதியை பார்க்காத கால் அல்ல என்று தம்மை பற்றி வெளிவரும் விமர்சனங்களுக்கு அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
சென்னையில் கொட்டித் தீர்த்து வருகிறது கனமழை. எங்கு பார்த்தாலும் 2015ம் ஆண்டு பெய்த பெருமழை, வெள்ளத்தை நினைவுபடுத்தும் படி தலைநகர் சென்னை மழையால் திக்குமுக்காடி போயிருக்கிறது.
சென்னையின் முக்கியமான பகுதிகள், புறநகரில் உள்ள குடியிருப்புகள் என எங்கு பார்த்தாலும் ஜலமயமாய் காட்சி அளிக்க அரசியல்வாதிகளின் படகு பயணமும் மக்களை இம்சை செய்தது, விமர்சனங்களையும் கொண்டு வந்தது.
சென்னையை உண்டு, இல்லை என்று போட்டு தாக்கிய கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களை அதிரிபுதிரியாக்கியது. இந் நிலையில் சென்னை வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தங்கி இருக்கும் குடியிருப்பும் வெள்ளத்தின் பார்வையில் இருந்து தப்பவில்லை.
அவர் குடியிருக்கும் வீட்டின் முதல்தளம் வரை மழை நீர் சூழ, எங்கு பார்த்தாலும் தரைக்கு பதிலாக தண்ணீராகத்தான் காட்சி அளித்தது. என்ன செய்வது என்று அவர் யோசித்த தருணத்தில் பார்வையாளர்கள் அமருவதற்காக போடப்பட்டு இருந்த இரும்பு நாற்காலிகளை எடுத்து போட்டு அதில் ஒன்றன்மீது திருமாவளவனை கால் வைத்து கார் அருகே கொண்டு சென்றுவிட்டனர்.
அவரின் இந்த வீடியோ காலை முதலே நிற்காமல் அங்கிங்கெனாதபடி வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் விமர்சன கணைகளும் வந்து விழாமல் இல்லை. முதலமைச்சரே வெள்ளத்தில் இறங்கி ஆய்வு பணிகளை பார்வையிடுகிறார், மக்களுக்கு தமது கையால் சோறு போடுகிறார், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வலம் வருகிறார் என்று கருத்துகள் மொத்தமாக வந்து திணறடித்தன.
வீடியோ பற்றிய செய்தி தடம்மாறியதை உணர்ந்து விசிகவின் வன்னி அரசு இது குறித்து ஒரு விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஓர் அறையில் தான் 15 ஆண்டுகளாக தங்கி வருகிறார். அவர் நினைத்திருந்தால் சொகுசு ஓட்டலில் தங்கலாம்.
ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு தம்பிகளுடன் தான் தங்குகிறார். கால்கள் நனைந்துவிட கூடாது என்பதற்காக தான் தம்பிகள் இப்படி செய்தார்கள், இது பொறுக்க முடியாதவர்கள் கிண்டலும் கேலியும் பேசுகின்றனர் என்று கூறினார்.
கட்சியின் சார்பில் வன்னி அரசு விளக்கம் கொடுத்திருந்தாலும் அரசியல் ரீதியாக இந்த வீடியோ பயணிக்க ஆரம்பித்தது. மாறுபட்ட கருத்துகள் மீண்டும் வலம் வர… ஒரு கட்டத்தில் #திருமாவை_கொண்டாடுவோம் என்று ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி திணறடித்தது.
தொடர்ந்து சர்ச்சைகள் வலம் கொண்டு இருக்கும் நிலையில் வீடியோ குறித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது:
என் மீதும், என் இயக்கம் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த வீடியோ தவறாக சித்தரிக்கப்படுகிறது, பரப்பப்படுகிறது. நான் தங்கி இருப்பது அறக்கட்டளை, வீடு அல்ல.
மழை நேரங்களில் அங்கு சாக்கடை சூழ்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் இங்கு வெள்ளநீர் சூழ்ந்து விடும். டெல்லிக்கு அவசரமாக போகவேண்டியது கட்டாயம் என்பதால் இருக்கை மீது ஏறி நடந்தேன்.
நான் கீழே விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தொண்டர்கள் என்னை பிடித்துக் கொண்டனர். தொண்டர்களை எந்த தருணத்திலும் மரியாதை குறைவாக நடத்தும் எண்ணம் எனக்கு இல்லை. என் கால்கள் சேறு, சகதியை பார்க்காதது இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.