thirumavalavan condemns central govt

மத்திய அரசு தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், பாஜக அல்லாத மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தேவைகளை பெற வேண்டியே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளது.

ஆனால் எதிர்கட்சிகளோ மத்திய அரசிடம் தமிழக அரசு மண்டியிட்டு கிடப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இதனிடையே தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகின்றன. கதிராமங்கலம், மீனவர்கள் பிரச்சனை, காவிரி பிரச்சனை, நெடுவாசல் பிரச்சனை, நீட் தேர்வு, என ஏராளமான பிரச்சனைகள் கொட்டி கிடக்கின்றன.

இதை தீர்த்து வைக்க கோரி பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அமைச்சர்களும் முதலமைச்சரும் டெல்லிக்கும் சென்னைக்கும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு வந்த பாடில்லை.

இந்நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், மத்திய அரசு தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், பாஜக அல்லாத மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்பட உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்