சிலைகளை உடைக்காமல், அவமதிப்பு தொடராமல் இருக்க தனி உளவுப்படை மற்றும் காவல்படைகளை தமிழக அரசு அமைக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

"பெரியார், அம்பேத்கர் சிலைகளை உடைக்கும் போக்கு அரசியல் களத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது; அவமதிப்பு தொடராமல் இருக்க தனி உளவுப்படை மற்றும் காவல்படைகளை தமிழக அரசு அமைக்க வேண்டும். பெரியார் சிலை உடைப்பில் பாமக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் பாமக எந்தத் திசையில் பயணிக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பாமக தொண்டர்கள் எந்த வகையில் உறவாடுகிறார்கள் என்ற கேள்விகளும் எழுகின்றன. 

பெரியார் பெயரில் கொள்கை கோட்பாடுகளை வைத்து இயக்கம் நடத்துவதாகக் கூறும் பாமக, பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. இதற்குக் காரணம் கூடா நட்புதான். இந்த நிலை வேதனை அளிக்கிறது. பாஜக முஸ்லிம்களை குறி வைத்து காய்களை நகர்த்துகிறது. மற்ற மாநிலங்களில் அது எடுபடுவதைப் போல தமிழகத்தில் எடுபடவில்லை. அதனால் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறுவது, பெரியார் சிலைகளை உடைக்கத் தூண்டுவது போன்றது’’ என அவர் தெரிவித்துள்ளார்.