இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி அளித்த அழுத்தத்துக்குப் பணிந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைப் பாடத்திட்டத்திலிருந்து அருந்ததிராயின் நூலை நீக்கியிருப்பது வன்மையானக் கண்டனத்துக்குரியது. இத்தகைய அழுத்தங்களுக்குப் பணியவேண்டாம் என்று தமிழக அரசையும் பல்கலைக்கழகங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித் துறைப் பாடத்திட்டத்தில் அருந்ததிராயின் நூல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததிராய், பாஜகவின் வகுப்புவாத அரசியலைக் கடுமையாக விமர்சிப்பவர் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த அவரது நூலை நீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளது. அந்த மிரட்டலுக்குப் பயந்து பாடத்திட்டத்திலிருந்து அந்த நூலை நீக்கிவிட்டு வேறு ஒரு நூலை பல்கலைக்கழக நிர்வாகம் சேர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கல்வி நிலையங்களுக்கு அப்பாற்பட்ட சென்சார் அமைப்பாக ஏபிவிபி இயங்குகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.


பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இப்படியான நெருக்குதல்கள் கொடுக்கப்படுவது வழக்கம். ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.கே. ராமானுஜனின் ‘முன்னூறு ராமாயணங்கள்’ என்ற கட்டுரை சனாதன சக்திகளின் மிரட்டலால் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. தற்போது தமிழகத்திலும் அரங்கேறியிருப்பது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக அரசா அல்லது ஆர்எஸ்எஸ் அரசா என்னும் கேள்வி எழுகிறது. கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களின் நியமனங்களில் சனாதன சிந்தனை கொண்ட பலர் நியமிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வைப் பார்க்கத் தோன்றுகிறது. இது மிகவும் கவலைக்குரிய போக்காகும்.


கல்விக்கூடங்களைச் சனாதன மயமாக்கும் வகுப்புவாதிகளின் இத்தகைய சமூக விரோத சதித் திட்டத்துக்குத் தமிழக அரசு துணை போகக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.