நாடாளுமன்றத்தில் எல்லா சட்ட மசோதாக்களையும் தமிழக ஆளும் கட்சி அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள திருமாவளவன், சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, “ நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம், என்.ஐ.ஏ., முத்தலாக் தடை சட்டம், மனித உரிமைகள் சட்டம் உள்ளிட்ட மசோதாக்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிப்பு தெரிவித்தன. ஆனால், எதிர்ப்புக்கு இடையேயும் பெரும்பான்மை பலத்தை வைத்து பாஜக அரசு, சட்டங்களை  நிறைவேற்றிவிடுகிறது.
 நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு சட்ட மசோதாக்களை அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்தாலும் கேட்க மறுக்கிறார்கள். பாஜகவிடம் குறைந்தபட்ச ஜனநாயக அணுகுமுறைகூட இல்லை. தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால், எதிர்க்கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு பாஜக வந்துவிட்டது. நாடாளுமன்றத்தை பாஜக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
பாஜக கொண்டு வரும் எல்லா சட்ட மசோதாக்களையும் அதன் கூட்டணி கட்சியும் தமிழகத்தின் ஆளும் கட்சியுமான அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று திருமாவளன் தெரிவித்தார்.