நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அந்தக் கூட்டணியிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது. 

ஆனால் இடையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேறச் சொன்னதாக தகவல்கள் பரவியது. ஆனால், அது வதந்தி என்பதை மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பின் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உறுதி செய்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். சுமார் ½ மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய  தொல்.திருமாவளவன் , உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும். 

தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தமிழக அரசு ஈடுகட்டி வழங்க வேண்டும் போன்ற அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

இலங்கை அதிபர் தேர்தல் முடிவு கவலையும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. முள்ளி வாய்க்கால் படுகொலையை அரங்கேற்றிய கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பது அங்கு வசிக்கும் தமிழக மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.

திமுக  கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து பேசியது திமுகவுனருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் திருமாவளவன் முதலமைச்சர் எடப்பாடியுடன்  உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பாரோ என்றும் பேசப்படுகறது.