மிக விரைவில் ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு  வினியோகிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ள கருத்தை பாஜக வரவேற்றுள்ளது.

 

பாஜக தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வள்ளுவருக்கு காவி நிறத்தில் உடை அணிவித்து, உத்திராட்சம் கொட்டை அணிவித்து, திரிநீறு பூசி வடிவமைத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சாணி வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதாக திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

 

இந்த சர்ச்சை ஒடுங்குவதற்குள் மிக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு  வினியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


 
இதனை வரவேற்றுள்ள பாஜக மேலிடப்பார்வையாளர் முரளிதரராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ’தினமும் வீடுகளில் பயன்படுத்த விநியோகிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட பாஜக வேண்டுகோள் விடுத்ததை ஏற்றுக் கொண்டு முடிவெடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி’’என தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே திருவள்ளுவர் சர்ச்சை ஓயாத நிலையில், திருக்குறள் ஆவின் பாக்கெட்டுகளில் இடம்பெற உள்ளதை எதிர்கட்சிகள் சர்ச்சையாக்குமா? அல்லது திருக்குறளை மட்டும் அச்சிடுவதால் வரவேற்குமா? என்பது சில தினங்களில் தெரிந்து விடும்.