மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் ரஜினி. அவருக்காக உயிரை கொடுக்கக்கூடிய தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களது ரசிகர்களால் உங்களது கொடும்பாவியை எரிக்க முடியாதா? என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசமடைந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ’’திகவினர் ரஜினியை எதிர்க்கிறார்களா? இல்லை பார்ப்பனியத்தை எதிர்க்கிறார்களா?  சமுதாயம் என்று சொன்னால் எல்லோரும் அங்கீகாரத்தோடு வாழ வேண்டும்.  ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி அரசியல் பிழைப்பு நடத்தும் திகவின் கொள்கையை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை எனக்குப்பிடிக்கும். அவரது கொள்கைகள் இல்லையென்றால் நானெல்லாம் இப்போது அமைச்சராகி இருக்க முடியாது. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை. அனைத்து மதத்தினரையும் இப்படி கொச்சைப்படுத்தி இருந்தால் கூட சகித்து கொள்ளலாம். ஆனால், இந்து மதத்தை மட்டும் இழிவு படுத்துவது ஏன்? 
  
ரஜினிகாந்த் ரசிகர்கள் இவ்வளவுக்கு பிறகும் பொறுமையாக இருக்கிறார்கள் என்றால் எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. அவருடைய தலைவரின் கொடும்பாவி எரிக்கும் செய்திகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ரஜினிகாந்த் என்ன மகாபாதக செயலை செய்து விட்டாரா? பெரியாரைப்பற்றி அவர் பெரிய பிரச்னை எதையும் சொல்லவில்லையே.

 

ரஜினியை பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே இருந்தால் என்ன? ஆர்எஸ்எஸ் என்ன பயங்கரவாத அமைப்பா? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்கு குண்டு வைத்தார்கள். எஸ்.ஐ.வில்சனை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்தனர். அதற்காக முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று சொன்னால் சரியாக இருக்குமா? மகாத்மா காந்தியை கொலை செய்தது கோட்சே. ஆர்.எஸ்.எஸ். அல்ல. எனவே கோட்சேவைத் தான் கொலையாளியாக பார்க்க வேண்டும். கோயிலுக்கு சாமி கும்பிடச் செல்பவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.,காரர்களா?

யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம். வழிபாட்டு முறை தான் வெவ்வேறு. கடவுள் ஒன்றே. நேர்மையாக சமூக சேவை செய்பவர்கள் எல்லாம் ஆன்மிக அரசியல்வாதிகள் தான். ரஜினி தமிழச்சியை திருமணம் செய்திருக்கிறார். 40 ஆண்டு காலமாக தமிழகத்தில் இருக்கிறார். தனது இரு மகள்களையும் தமிழர்களுக்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார். அந்த மனிதரை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. இந்துக் கடவுள்களை கொச்சைப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சிகள்காணாமல் போய்விடும்.

அவர்கள் தண்டிக்கப்படுவார்கள், கண்டிக்கப்படுவார்கள். ரஜினியை என்ன மிரட்டுகிறீர்களா? நீங்கள் மிரட்டுவதற்கெல்லாம் இளிச்சாப்பையன் கிடையாது அவர்.  அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.  எல்லாப்பையல்களும் சேர்ந்து என்ன மிரட்டுறீங்க..? மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் ரஜினி. அவருக்காக உயிரை கொடுக்கக்கூடிய தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களது ரசிகர்களால் உங்களது கொடும்பாவியை எரிக்க முடியாதா? இந்துக்களை திக- திமுகவினர் இளிச்சா பையன்களாக நினைக்கிறார்கள்.  என்னதான் அடிச்சாலும் பொறுத்து போய்விடுவார்கள், இந்துக்களுக்கு முதுகெலும்பு இல்லை என நினைக்கிறார்கள். எங்களுக்கு முதுகெலும்பு இரும்பு மாதிரி இருக்கிறது என்பதை காட்ட வேண்டிய சூழ்நிலை விரைவில் இந்துக்களுக்கு வந்து விடும். அப்படி வரும்போது திமுகவும், திகவும் இல்லாமல் தவிடு பொடியாகி விடும்’’என அவர் தெரிவித்தார்.