Asianet News TamilAsianet News Tamil

கட்டி முடிக்காத கோவிலை திறந்துட்டு எதையோ சாதித்ததுபோல காட்ட நினைக்கிறார்கள்! பாஜக விளாசும் முதல்வர் ஸ்டாலின்!

இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லோரும் கடமையாற்ற வேண்டும். ஏன் என்றால், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தேர்தல்.

They want to show that they have achieved something by opening an unfinished temple... CM Stalin tvk
Author
First Published Jan 24, 2024, 9:06 AM IST

தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோயிலைக் காட்டி, மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறது பாஜக தலைமை என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய முதல்வர் இன்று, நமது கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் - கழகப் பொருளாளருமான என்னுடைய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் எழுதியுள்ள ‘பாதை மாறாப் பயணம்‘ புத்தகத்தின் மூன்றாவது பாகத்தை வெளியிடுகிறேன். பாலு அவர்களை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், சின்சியாரிட்டி! ஏதாவது சொன்னோம் என்றால், அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த ஃபோனே செய்வார்.

இதையும் படிங்க;- வேறு வழியே இல்லை.. உச்சநீதிமன்றம் கதவை தட்டிய திமுக அமைச்சர்கள்.. இடையில் புகுந்த அதிமுக, பாஜக.!

விருதுநகர் முப்பெரும் விழாவில் நம்முடைய பாலு அவர்களைப் பற்றி நான் பேசியதை, மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கிறேன்... ‘கலைஞரின் தொண்டரா? தோழரா? செல்லப்பிள்ளையா? உடன்பிறப்பா? பற்றாளரா? வெறியரா? என்னவென்று பாலுவைச் சொல்வது? இது எல்லாம் கலந்த கலவைதான் பாலு‘ என்று அன்று நான் சொன்னேன். அன்றைக்கு நான் சுருக்கமாக சொன்னதற்கு விளக்கவுரையாக தன்னுடைய தன்வரலாற்றை எழுதி இருக்கிறார் நம்முடைய பாலு! 17 வயதில் தலைவர் கலைஞரின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்த பாலுவிற்கு, இப்போது 80 வயது! இன்றைக்கு வரைக்கும், ‘ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை‘ என்று கொள்கைப் பிடிப்போடு இயங்கிக் கொண்டு இருக்கிறார்.

கோபாலபுரம் பகுதியில் நான் இளைஞர் திமுக தொடங்கிய நேரத்தில் எனக்குத் துணையாக இருந்தவர். பின்னாளில் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் வழித்தடத்தை விளக்கத்தான் இந்தப் ‘பாதை மாறாப் பயணம்‘! இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம்! பா.ஜ.க.வை வீழ்த்தப் போகும் இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் நம்முடைய பாலுவிற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. 

இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லோரும் கடமையாற்ற வேண்டும்! ஏன் என்றால், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தேர்தல். கடந்த பத்தாண்டுகாலமாக, மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோயிலைக் காட்டி, மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. தேர்தலைச் சந்திக்க இருக்கும் பா.ஜ.க.விற்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவரசமாகத் திறந்து, எதையோ சாதித்துவிட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இதுமாதிரியான திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள். இது உறுதி.

இதையும் படிங்க;-  மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி தேர்வு.. யார் இவர் தெரியுமா?

எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி. அந்தக் கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப்பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு  பேச்சுவார்த்தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு ஒன்றிய அரசை உருவாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழைகிறோம். அதற்கும், டி.ஆர்.பாலு அவர்கள் தயாராக வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios