They try to destroy the historical symbols - Pa.Vijay
மீத்தேன் உள்ளிட்ட கனிமங்கள் எடுக்கின்ற போர்வையில் சில நிறுவனங்கள் வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், எந்த துறையில் இருந்து வேண்டுமென்றாலும் தகுதியானவர்கள் அரசியலுக்கு வரலாம் என்று கவிஞர் பா.விஜய் கூறியுள்ளார்
காலத்தை வென்ற கங்கைகொண்டானே என்ற புத்தக வெளியீட்டு விழா அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பா.விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வளர்ந்திருந்த கட்டடக்கலை, நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து பா.விஜய் பேசினார். கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழர்களின் வரலாறு குறித்தும் விளக்கப்பட்டது. வரலாற்றுப் பேராசிரியர்கள், தொல்லியலாளர்கள், சுற்றுலா பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.
புத்தக வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பா.விஜய், சோழர்களின் ஆட்சியில் நீண்ட காலம் தலைநகராக விளங்கிய தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன.
சோழர்கள் ஆட்சி செய்த இந்த பூமியில் மீத்தேன் உள்ளிட்ட கனிமங்கள் எடுக்கின்ற போர்வையில் சில நிறுவனங்கள் வரலாற்றுச் சின்னங்களை அழிக்க முயற்சி செய்கின்றன. இதனால் நம் முன்னோர்கள் சோழர்களின் பெருமைகளை அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே, வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமே தவிர அழிக்க நினைக்கக் கூடாது என்றார்.

கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் எல்லாம் திரையுலகில் இருந்து ஆட்சி செய்தவர்கள்தான். திரையுலகம் மட்டுமின்றி எந்தத் துறையிலிருந்து வேண்டும் என்றாலும் தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கு எந்தவிதத்திலும் யாரும் தடைவிதிக்க முடியாது என்று கவிஞர் பா.விஜய் கூறினார்.
