தேர்தல் அரசியலில் தேய்ந்து கிடக்கும் தே.மு.தி.க. தனது செல்வாக்கை (இருக்குதா அப்படியொண்ணு?) பிற கட்சிகளிடம் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக காட்டிட திட்டமிட்டது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநாட்டை நடத்திட திட்டமிட்டது. ஆனால் விஜயகாந்தின் உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் அது முடியவில்லை. ஒத்திப் போடப்பட்ட அந்த மாநாடு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ‘முப்பெரும் விழா’வாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு வெகு சில நிமிடங்கள் பேசியது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அம்மேடையில் பேசிய தே.மு.தி.க.வின் தலைமை  கழக பேச்சாளர்கள் இருவர் அ.தி.மு.க.வை ஓவராக உரசிப் பேசிவிட்டனர். குறிப்பாக நடிகரும், தே.மு.தி.க. நிர்வாகியுமான ராஜேந்திர பிரசாத் “எங்கள் தலைவர் விஜயகாந்த் பிறவியிலேயே வள்ளல். ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே ஏழை எளிய மாணவ நண்பர்களுக்கு பென்சில், ஸ்கேல் என்று வாங்கிக் கொடுத்தவர். 
வளர்ந்து நடிகரானதும் தனது சம்பாத்தியத்தில் முப்பது சதவீதத்தை ஏழை, எளியவர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். ஒரு படத்தில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைத்தால், அதில் முப்பது ஆயிரம் ரூபாயை தானமாக கொடுத்தவர். இவ்வளவு பெரிய வள்ளல் குணம் வேறு எந்த நடிகரிடமும் கிடையாது. இவ்வளவு ஏன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் கூட இப்படியொரு குணம் இல்லை. ” என்றார்.

 இந்த முப்பெரும் விழாவை சேட்டிலைட் சேனல்களில் லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் கடுப்பாகிவிட்டனர். 
“தன்னை கறுப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லி எங்கள் தலைவருக்கு நிகராக வந்து அமர்ந்தார். சரி, போகட்டும்! என்று நாங்கள் கண்டு கொள்ளாமல் விட்டுட்டோம். ஆனால் இன்றோ, உலகமே போற்றும் வள்ளலான எம்.ஜி.ஆரை விட உயர்ந்தவர் இந்த விஜயகாந்த் என்று அவர் கட்சியினர் வாய்பேசுவது கேட்க சகிக்காத வாக்கியம். இந்த பேச்சுக்கு விஜயகாந்த் தரப்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்கின்றனர் ஆவேசமாக. 

அதேபோல் இந்த நிகழ்வில் பேசிய  மற்றொரு நிர்வாகியோ “எங்கள் கட்சியின் பொருளாளர் (பிரேமலதா)நூறு ஜெயலலிதாவுக்கு சமமானவர். தன் குடும்பத்தையும் இனிமையாக நடத்திக் கொண்டு, கட்சியையும் காப்பாற்றிச் சென்று கொண்டிருக்கிறார். அவர் நூறு ஜெயலலிதாவுக்கு சமம்.” என்று கொக்கரித்துவிட்டார்.

இந்த மேடையில் பேசிய பிரேமலதாவும் அ.தி.மு.க. ஆட்சியில் சட்ட ஒழுங்கு சூழல் சீர் கெட்டு கிடப்பதாக ஒரு தாக்கு தாக்கினார். 
இதற்கெல்லாம் சேர்த்துத்தான், இந்த கட்டுரையின் முதல் பாராவில் நீங்கள் வாசித்தது போல் கொந்தளித்திருக்கின்றனர் அ.தி.மு.க.வினர். 
ஆக அதகளம் ஆரம்பமாயிடுச்சு!