There is no record of BJP rule in 4 years - GK Vasan

இராமநாதபுரம் 

பாஜக ஆட்சியில் நான்கு ஆண்டு சாதனை ஒன்றுமில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சாடினார்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அடுத்துள்ள பேக்கரும்பு கிராமத்தில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்தார் அதன் தலைவர் ஜி.கே.வாசன்.

அப்போது அவர், "தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நேரத்தில் இந்தியா, இலங்கை ஆகிய இரு நாட்டு அரசுகளும் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாததால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர். 

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 160-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை உடனே விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். 

தூத்துக்குடியில் நடந்த அசம்பாவிதத்துக்கு காவல்துறை, ஆட்சியாளர்களின் அலட்சியமே காரணம். 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. 

சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற தீர்மானத்தை, அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற வேண்டும். 

பாஜக ஆட்சியில் நான்கு ஆண்டு சாதனை ஒன்றுமில்லை. இன்று வரை மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பிரச்னைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.