பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது போல இந்தியாவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை எனவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட  மாதிரிகளை அடிப்படையாக வைத்து ஆராய்ந்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் என்ஏஆர்ஐ தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்தை துண்டித்துள்ளன. கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முதல் முதலாக பைசர் நிறுவனத்தின்  தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது பிரிட்டன் அரசு தான். ஆனால் அங்கு தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அங்கு கடுமையாக்கப்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் லண்டன் நகர  சாலைகளில் மக்கள் கூட்டம் பெருமளவில் குறைந்துள்ளது. அதேபோல பிரிட்டனுக்கான எல்லைகளை பல்வேறு நாடுகள் மூடிவிட்டதால் சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அந்நாட்டு எல்லையில் அணிவகுத்து நிற்கின்றன. புதிய வகை வைரஸ் பிரிட்டன் முழுவதும் வேகமெடுத்துள்ளதால் கனடா, அயர்லாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், சவுதி அரேபியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள்  பிரிட்டனுடனான விமான போக்குவரத்தையும் தடை செய்துள்ளன. 

பிரிட்டனில் வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்து 25 வயது மாணவருக்கு புதியவகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக விமான நிலையங்கள் அனைத்தும்  தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் லண்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்த சுமார் 2756 பயணிகள் வந்துள்ளதாகவும், அவர்களை கண்காணித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் துரிதமாக ஈடுபட்டுவருகின்றனர். புதிய வைரஸ் மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் பரவியிருக்க கூடுமோ என்ற அச்சம் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் (ஐசிஎம்ஆர்) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கிளை அமைப்பான (என்.ஏ.ஆர்.ஐ) தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், பிரிட்டனில் உருமாறியது போல இந்தியாவில் பரவியுள்ள கொரோனாவில் எந்தவித உரு மாற்றமும் இல்லை என கூறியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2000 மேற்பட்ட மாதிரிகள்  ஆராய்ச்சிக்காக சோதிக்கப் பட்டதாகவும், அதன் மூலும் வைரஸில் உருமாற்றும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் இயக்குனர், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை கொரோனா வைரஸ் என்ஐஆர்ஐ நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேமிக்கப்பட்ட  மாதிரிகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர்  சமீரா பாண்டே தெரிவித்துள்ளார். முதலில் இந்த வைரஸ் எந்த வகையானது, அதன் பரவல் மற்றும் அதன் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வைரஸ் மக்களின் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு ஆபத்தானதாக இருக்கும் என்பது குறித்து நம்மிடத்தில் எந்த புரிதலும் இல்லை. முதலில்  நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து கடந்த 6-7  மாதங்களாக நாட்டில் பரவும் வைரஸ் மரபணு குறித்து கண்காணித்து வருவதாக கூறிய அவர், இதற்காக நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரையில் அதுபோன்ற எந்த மாற்றமும் தென்படவில்லை என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் வைரஸின் உருவம் மாறுபட்டிருப்பதாக கூறியுள்ளார். 

இது பல மாநிலங்களில் வேகமாக பரவுகிறது, சில மாநிங்களில் மெதுவாக பரவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய வைரஸ் தாக்குமா? தாக்காதா என்று கூறுவதைவிட, வைரசின் தொடர் சங்கிலியை உடைப்பதற்கான நடைமுறை கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றார். நாட்டில் சுமார் 11 வகை ஒத்த வைரஸ்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள, எனவே புதிய வகை வைரஸ் குறித்து பீதி அடைய தேவையில்லை, இது அதை கண்காணிக்க வேண்டிய நேரம் என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், பலர் தடுப்பூசி தோல்வியடையும் என்று கூறுகின்றனர், தடுப்பூசி வைரஸின் வெவ்வேறு கூறுகளுக்கு எதிராக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, எனவே புதிதாக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் தோல்வியடையும் என்று நினைப்பது சரி அல்ல. அதற்கு போதுமான அறிவியல் சான்றுகளும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.